"லுங்கி.. லுங்கி.." தென்னிந்தியர்களை அவமானப்படுத்திய பாஜக எம்பி.. நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை!
டெல்லி: ராஜ்யசபாவில் "லுங்கிவாலா" என்று இழிவுபடுத்தும் வகையில் தங்களை பார்த்து பாஜக எம்பி சுஷ்மிதா தேவ் கோஷமிட்டதாகவும் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் பிரிவிலேஜ் கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் பிராந்திய அடையாளத்தை இழிவுபடுத்தும் வகையில் லுங்கிவாலா என கோஷமிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இப்போது மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியே வருகிறது. லோக்சபா இதனால் மொத்தமாக முடங்கியுள்ள நிலையில், ராஜ்யசபா பெரும்பாலும் முடங்கி இருக்கிறது. ஓரிரு விவாதங்கள் மட்டுமே ராஜ்யசபாவில் நடந்து வருகிறது.

லுங்கிவாலா
இதற்கிடையே ராஜ்சயபாவில் பாஜக எம்பி சுஷ்மிதா தேவ் தன்னை லுங்கிவாலா என அழைத்தாக சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் பிரிவிலேஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜ்யசபாவில் திங்கள்கிழமை வரி தொடர்பான விவாதம் நடைபெற்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான வருமான வரி சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை ஜான் பிரிட்டாஸ் முன்வைத்து பேசிக்கொண்டிருந்தபோது, சுஷ்மிதா தேவ் தனது உரையை இடைமறித்து "லுங்கிவாலா" என்று பலமுறை குறிப்பிட்டதாக பிரிட்டாஸ் தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
நோட்டீஸ்
ராஜ்யசபா விதிமுறைகளின் 188ன் கீழ் இந்த பிரிவிலேஜ் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை தனிப்பட்ட முறையில் அவமதித்தது என்ற அளவில் மட்டும் இந்த விவகாரத்தை பார்க்கக்கூடாது என்று பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார். ஒரு எம்பி நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, அவரது பிராந்திய மற்றும் கலாச்சார அடையாளத்தை கேலி செய்யும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது முக்கியமான பிரச்சினை என்றும் அவர் கூறியுள்ளார்.
லுங்கி என்பது இந்தியாவின் தென்பகுதிகளில் குறிப்பாக பரவலாக அணியப்படும் பாரம்பரிய உடை என்றும் ஆனால் அதை இழிவான அர்த்தத்தில் பயன்படுத்துவது தென்னிந்தியர்களை கேலி செய்யும் ஒரு செயல் என்று பிரிட்டாஸ் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். லுங்கிவாலா என்ற வார்த்தை தென்னிந்திய மக்களை கலாச்சார ரீதியாக வேறுபடுத்தி காட்டுவதற்காக வரலாற்றில் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரிட்டாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இழிவுபடுத்தும் நடவடிக்கை
குறிப்பாக 1960கள் மற்றும் 1970களில் மும்பையில் நடைபெற்ற தென்னிந்தியர்களுக்கு எதிரான இயக்கங்கள் இருந்தபோது தென்னிந்தியர்களை லுங்கிவாலா மற்றும் மதராஸி என்று இழிவுபடுத்த அழைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற வரலாற்று பின்னணி கொண்ட ஒரு வார்த்தையை நாடாளுமன்றத்தில் உறுப்பினரை குறிவைத்து பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சில எம்பிக்களும் அந்த வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பிரிட்டாஸ் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு அருகில் அமர்ந்திருந்த சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக பிரிட்டாஸ் கூறியுள்ளார். மேலும், திமுக எம்பி வில்சன் மற்றும் தேமுதிக எம்பி சுதீஷ் ஆகியோரும் லுங்கிவாலா கோஷத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ராஜ்யசபா தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜான் பிரிட்டாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இத்தனை நாட்களாக மாணவர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வந்தனர். இதற்கிடையே கடைசி நாளான நாளை இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications
