ஒரே நாடு ஒரே தேர்தல்! ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது
டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவில் கடந்த, 1967ம் ஆண்டு வரை மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. புதிய மாநிலங்கள் உருவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஆந்திரப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.

இப்படி இருக்கையில், மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதேபோல மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உயர்நிலைக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார். மத்திய சட்டத் துறைச் செயலர் நிதின் சந்திரா, குழுவின் செயலராகப் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு, இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம், 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம், தேர்தலுக்கு ஆகும் செலவு குறையும் என்று பாஜக சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், "தேர்தல் நடத்துவதை வெறும் செலவுப் பிரச்சினையாகச் சுருக்கிவிட முடியாது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போது சில மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது" என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மேலும், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் காலம் ஐந்து ஆண்டுகள். அதேநேரம், அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி ஆளுநரும் ஆட்சியைக் கலைக்கலாம். ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது என்பது, மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்தத் திட்டத்துக்காக அரசைக் கலைத்தால், தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்" என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications