அடுத்த குட்நியூஸ்.. ராமேஸ்வரம்- இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் சேவை.. பிரதமர் மோடி ‛வாவ்’ அறிவிப்பு
டெல்லி: தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு இன்று கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று பேசியபோது இன்னொரு புதிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதையடுத்து இருநாடுகள் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் தயாரிக்கப்பட்டது. செரியாபாணி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு 2 நாட்கள் சோதனை ஓட்டம் நடந்தது. இதையடுத்து கடந்த 10ம் தேதி கப்பல் சேவை தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இறுதி நேரத்தில் கப்பல் சேவை தொடங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து நாகை துறைமுகம்-இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டது. நாகை துறைமுகத்தில் இருந்து மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த் சோனாவால் , தமிழக அமைச்சர்கள் எவ வேலு, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா இலங்கையில் அமல்படுத்தும் திட்டங்கள் அந்த மக்களை வளர்ச்சியடைய செய்து வருகிறது. இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் பல திட்டங்களை இந்தியா செய்துள்ளது. காங்கேசன் துறைமுகத்தை இந்தியா அரசு வளப்படுத்தி வருகிறது. இலங்கையின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்க இருப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜாப்னா பண்பாட்டு மையத்தை அமைத்து கொடுத்துள்ளோம். பல அவசர உதவி மையங்கள் அமைத்து வழங்கப்பட்டுள்ளது. டிக்கோயாவில் பன்னோக்கு மருத்துவமனையை அமைத்து கொடுக்கிறோம். அனைவரோடு இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக பயணித்தல் என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறோம்.
ஜி20 உச்சி மாநாட்டில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்தை கூறினோம். அதன்படி தற்போது செயல்பட்டு வருகிறோம். ஜி20 உச்சிமாநாட்டின் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், சிரியா வரை பொருளாதார காரிடார் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இது அந்த நாடுகளின் பொருளாதார நிலையை வெகுவாக முன்னேற்றும். இதனால் இருநாடுகள் இணைக்கப்படும்.
தற்போதைய இந்த கப்பல் சேவை (நாகை-காங்கேசன் துறைமுகம் கப்பல் சேவை) தொடங்குவதற்காக இலங்கை அதிபர், மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதன்பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையுடன் சேர்ந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. நன்றி'' என்றார்.












Click it and Unblock the Notifications