ரூ.167 கோடிக்கு ஏலம் போன ரவி வர்மாவின் "யசோதா + கிருஷ்ணா" ஓவியம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
டெல்லி: நம் நாட்டின் புகழ்பெற்ற ஓவியரான ரவி வர்மா வரைந்த ஓவியம் ரூ.167.2 கோடிக்கு ஏலம் போய் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. யசோதாவும், கிருஷ்ணாவும் பசுமாட்டுடன் சேர்ந்து இருக்கும் இந்த ஓவியத்தை தொழிலதிபரும், சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிறுவனருமான சைரஸ் பூனவல்லா ஏலம் எடுத்துள்ளார்.
நம் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் தான் ரவி வர்மா. இவர் 1848ல் திருவிதாங்கூர் சமஸ்தான பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர். ஏராளமான ஓவியங்களை இவர் வரைந்திருந்தார். 1894ல் லித்தோகிராஃபிக் அச்சகத்தை தொடங்கி தான் வரைந்த ஓவியங்களை அச்சு பிரதிகளாக்கினார்.

ஐரோப்பிய டெக்னிக்கை பயன்படுத்தி இந்தியர்களின் உணர்வுகளை அதில் சேர்ந்து அவர் தத்ரூபமாக ஓவியங்கள் வரைந்தார். குறிப்பாக இந்து தெய்வங்கள் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்து ஓவியங்களை வரைந்திருந்தார். இந்த ஓவியங்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.
ரூ.167.2 கோடிக்கு ஏலம்போன ஓவியம்
இவர் கடந்த 1890ல் ' கிருஷ்ணா தனது வளர்ப்பு தாயான யசோதா மற்றும் பசுமாட்டுடன் சேர்ந்து இருப்பது போன்ற ஓவியத்தை வரைந்திருந்தார். இந்த ஓவியத்தை பிரபல சாபிபிரோனார்ட் (Saffronart) ஏலம் விடுவதாக அறிவித்தது. இந்த ஓவியம் ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை செல்லும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஓவியம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 167.2 கோடிக்கு போனது.
ஏலம் எடுத்த பூனவல்லா
இந்திய தொழிலபதிரும், சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிறுவனருமான சைரஸ் பூனவல்லா தான் இந்த ஓவியத்தை ஏலம் எடுத்தார். இதுபற்றி சைரஸ் பூனவல்லா கூறுகையில், ''இந்த ஓவியத்தை ஏலம் எடுத்ததை பாக்கியமாகவும், பொறுப்பாகவும் நினைக்கிறேன். இந்த ஓவியத்தை பொதுமக்களின் பார்வைக்கு வழங்க வேண்டும். இதற்கு நான் முயற்சி செய்வேன்'' என்றார்.
முந்தைய ரெக்கார்ட் முறியடிப்பு
அதேபோல் Saffronart தலைவரும், இணை நிறுவனமான மினல் வஜிரானி கூறுகையில், ''ஓவிய சந்தையில் இது புதிய மைல்கல். இது வெறும் மைல்கல் மட்டுமின்றி இந்தியக் கலையின் நீடித்த கலாச்சாரத்தை பறைசாற்றும் அம்சமாக உள்ளது'' என்றார்.
இதற்கு முன்பு எம்எஃப் ஹுசைனின் Untitled (GramYatra) என்ற ஓவியத்தை ரூ.118 கோடிக்கு டெல்லியைச் சேர்ந்த கிரண் நாடார் ஏலம் எடுத்து இருந்தார். இதுதான் மிகப்பெரிய தொகைக்கு போன ஓவியமாக இருந்தது. தற்போது யசோதா - கிருஷ்ணர் ஓவியம் அந்த சாதனையை முறியடித்து முதலிடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications