பெட்ரோல், டீசல் விலை உயர்வு? கசப்பான செய்தியை சொன்ன ரிசர்வ் வங்கி கவர்னர்! கலக்கத்தில் பொதுமக்கள்
டெல்லி: மத்தியக் கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ப் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் ஒரு இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது. இதற்கிடையே வளைகுடாவில் போர் நீடித்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படலாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
வளைகுடாவில் போர்ப் பதற்றம் தொடர்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஆரம்பித்த போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக மாறிமாறி தாக்கிக் கொள்வது முடிவுக்கு வந்தாலும் கூட இதுவரை அங்குப் பதற்றம் முழுமையாக விலகவில்லை. இதனால் ஹார்முஸ்ல ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. அங்குக் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர்
இதற்கிடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இது தொடர்பாகச் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் உலகளாவிய நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். பிப்ரவரி 28 முதல் மத்தியக் கிழக்கில் போர் தொடங்கிவிட்ட போதிலும், இந்திய அரசு இதுவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்கிறது. ஆனால், அந்த நிலை மாறலாம் என்பது போல சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
விலை உயரும்
இந்தியா தனது எரிசக்தி மற்றும் உரத் தேவைகளுக்காக 80%+ சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதியையே நம்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகளாவிய எண்ணெய் விநியோகம் நடக்கிறது. இப்போது அங்கே ஏற்பட்டுள்ள முடக்கம், உலகளவில் எண்ணெய் விலையை எகிற வைத்துள்ளது. "இந்தப் போர் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடித்தால், சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள இந்த விலையை மக்களிடம் பாஸ் செய்வதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை" என மல்ஹோத்ரா எச்சரித்துள்ளார்.
ஒருபுறம் கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது என்றால், மறுபுறம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருகிறது. தற்போது ஒரு டாலர் 95 ரூபாய்க்கும் கீழே சரிந்திருப்பது இந்தியாவின் இறக்குமதிச் செலவை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தவே பிரதமர் மோடி சிக்கனம் தேவை என மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
பொது போக்குவரத்து
அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க அரசு சில கடுமையான உத்திகளைக் கையில் எடுத்துள்ளது.. தேவையற்ற வாகனப் பயணங்களைக் குறைத்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தப் பொதுமக்களை ஊக்குவித்து வருகிறது. மேலும், இறக்குமதியைக் குறைக்கச் சமையல் எண்ணெய் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அடுத்த ஒரு ஆண்டிற்குத் தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்..
பொதுமக்கள்
பெட்ரோல் டீசல் விலை கொஞ்சம் உயர்ந்தாலும் கூட இறுதியில் அந்தப் பாரம் சாமானிய மக்களின் தலையில்தான் விழப்போகிறது. ஏற்கனவே 100 ரூபாயைத் தாண்டி விற்கப்படும் பெட்ரோல் விலை, இன்னும் அதிகரித்தால் அது அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் சேர்த்துத் தூக்கிவிடும். அதிலும் குறிப்பாக டீசல் விலை ஏறினால் காய்கறி தொடங்கி அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருக்கவே செய்கிறது.
வளைகுடாவைப் பொறுத்தவரை ஒரு பக்கம் ஹார்முஸில் தங்கள் அனுமதி இல்லாமல் எந்தவொரு கப்பலும் செல்லக்கூடாது என ஈரான் சொல்கிறது. மற்றொரு பக்கம் ஈரானுக்கு செல்லும் கப்பல்களை முடக்குவோம் என அமெரிக்கா சொல்கிறது. இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications