"இவ்ளோ கெட்ட கொழுப்பா! இந்த பேஷன்ட் உயிரோடுதான் இருக்கிறாரா" தலைகீழாக புரட்டி போட்ட டயட்+வாக்கிங்
டெல்லி: உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் மற்றும் நடைப்பயிற்சி மூலம் 30 வயது நீரிழிவு நோயாளியின் கெட்ட கொழுப்பு குறைந்துள்ளது நம்ப முடியாத மாற்றம் என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் வயதானால்தான் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவை ஏற்படும். ஆனால் இந்த காலத்தில் பிறந்த குழந்தைக்கு கூட இவை ஏற்படுகிறது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இன்று இந்த நோய்கள் இளசுகளுக்கு ஏற்படுவதற்கு உடல் உழைப்பின்மை என சொல்லலாம். மேலும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் நொறுக்கு தீனிகளையும் குழந்தைகள் உண்கிறார்கள். மேலும் அந்த காலத்தில் பள்ளி விட்டு வந்ததும் வீட்டில் செய்த ஸ்னாக்ஸை சாப்பிடுவோம்.

சூரிய வெளிச்சம்
அதன் பின்னர் நன்கு வியர்த்து விறுவிறுக்கும் வரை ஓடியாடுவோம். ஆனால் இன்று சூரிய வெளிச்சமும் மாலை வெயிலும் குழந்தைகள் மேல் படுவதே இல்லை. வீட்டுக்குள் உட்கார்ந்தபடியே செல்போனிலும் வீடியோ கேமிலும் விளையாடி தங்கள் பொழுதை கழிக்கிறார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி காய்ச்சல் , சளி, உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

உணவை விட மருந்து
உணவை விட மருந்து மாத்திரைகளையே அதிகமாக உட்கொள்கிறோம். ஒரு காமெடியில் இந்த மருந்து சாப்பிட்டதற்கு பிறகா இல்லை சாப்பாட்டுக்கு முன்பா என கேட்ட போது இதுதான் சாப்பாடே என சொல்வார்கள். அதுபோல்தான் நிலைமை உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம். 30 வயதை சேர்ந்த ஒருவருக்கு நீரிழிவு நோய். கூடவே கொழுப்பும்!

லிபிட் புரபைல்
அவருக்கு லிபிட் புரபைல் டெஸ்ட் எடுத்த போது டிரைகிளிசரைடுகளின் எண்ணிக்கை 3352.4 இருந்தது. அதாவது இயல்பான அளவை விட பல மடங்கு அதிகமாகும். அது போல் அவரது உடலில் கொழுப்பும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அதிகமாக இருந்தது. அந்த நபர் உட்கொள்ளும் உணவு குறித்து மருத்துவர் கேட்டறிந்து ஷாக் ஆனார்.

தோசை
அதாவது காலையில் தோசை அல்லது மெது வடை அல்லது வடை பாவ் ஆகியவற்றில் ஒன்றை ஆர்டர் செய்வாராம். அது போல் மதியமும் இரவும் சீன உணவுகளை வெளியே ஆர்டர் செய்து வாங்கி உண்பாராம். அது போக குளிர்பானமும் அவருக்கும் பிடிக்குமாம். 300 எம்எல் குளிர்பானத்தை குடிப்பீர்களா என மருத்துவர் கேட்டார். அதற்கு அந்த நோயாளி அதெல்லாம் இல்லை என்னுடன் யாராவது இருந்தால் நான் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை கட்டாயம் குடிப்பேன் என்றார்.

சர்க்கரையின் அளவு
அது போல் அந்த நபரின் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன்பு 320 , சாப்பிட்ட பிறகு 400 மற்றும் 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதிக்கப்டும் எச்பிஏ1சி- யின் அளவு 15.7 சதவீதம் ஆகும். இது மிக மிக அதிகமான அளவுகளாகும். சாப்பிடுவதற்கு முன்பு சர்க்கரையின் அளவு 99 அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு 140 க்கு கீழ் இருக்க வேண்டும். அது போல் எச்பிஏ1சி-யின் அளவு 2 முதல் 3 மாதங்களுக்கு 5.7 சதவீதத்தை விட குறைவாக இருக்க வேண்டும்.

நடைப்பயிற்சி
இதையடுத்து தினந்தோறும் நடைப்பயிற்சி செய்யுமாறும் உணவில் மாற்றத்தை கொண்டு வருமாறும் மருத்துவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் அந்த நபர் மருத்துவர் சொன்னதை கடைப்பிடித்தார். இதில் அந்த நபரின் டிரைகிளிசரைடு அளவு 1378 ஆக குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் 15 நாட்கள் குறித்து பரிசோதனை செய்த போது 315 க்கு வந்துவிட்டது. வழக்கமான இதன் அளவு 150 ஆகும். கிட்டத்தட்ட 3 ஆயிரத்திலிருந்து 300 க்கு குறைத்துள்ளது நம்ப முடியாத மாற்றமாக பார்க்கப்படுகிறது.

315 கொழுப்பு
மருத்துவரின் இந்த ட்வீட்டை பார்த்த இன்னொரு மருத்துவர் என்னுடைய 33 ஆண்டுகள் மருத்துவ பணியில் இதுவரை டிரைகிளிசரைடு 3353 இருந்ததை பார்த்ததே இல்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த மருத்துவர் ஆமாம் நன்றாக இருக்கிறார் என கூறி 315 க்கு குறைந்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications