யாழ்ப்பாணத்தில் சுற்றுலா விசாவில் மத பிரசாரம்- 13 இந்தியர்கள் நாடு கடத்தல்- இலங்கை திடீர் நடவடிக்கை!
டெல்லி: இலங்கை யாழ்ப்பாணத்தில் சுற்றுலா விசாவில் சென்று மத பிரசாரம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் 13 இந்தியர்களை இலங்கை அரசு அதிரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் சென்றவர்கள், நோய்களை குணப்படுத்துவதாக கூறி யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக இலங்கை அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சுற்றுலா விசா நடைமுறைகளை மீறியதாக இலங்கையில் இருந்து 13 இந்தியர்கள், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர். சுற்றுலா விசாவில் வந்து யாழ்ப்பணத்தில் சிற்பவேலைகளில் ஈடுபட்டிருந்தனர்; சிலர் யாழ்ப்பாணம் ஹோட்டல்களில் பணிபுரிந்தனர். இவர்கள் அனைவரும் மத பிரசாரத்தில் ஈடுபட்டதால் இந்தியாவுக்கே திருப்பி நாடு கடத்தப்பட்டனர்.
முன்னதாக மத மாற்ற பிரசாரத்தைத் தடுக்க கோரி இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் வெளியிட்ட அறிக்கை:
15 ஆண்டுகளுக்கு முன்பு. நூறு கிறித்தவர்கள் வாழ்ந்தார்கள் என வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகளுக்குப் பின்பு. இன்று 145 கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். 45% கிறித்தவர் தொகை உயர்வு.எங்கே?
இலங்கையின் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில், சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் ஒன்று நுவரெலியா. அங்கு மாவட்ட மக்கள் தொகையில் 50-55% சைவ சமயத்தினர். அடுத்த மக்கள் தொகை புத்த சமயத்தினர். 35-40%.
கிறித்தவ மதமாற்றிகள், முகமதிய காதல் ஜிகாதிகள் மலையகத்துக்குப் படையெடுக்கிறார்கள். சைவரையும் புத்தரையும் மதம் மாதற்றியே தீருவோம் என அடம் பிடிக்கிறார்கள். விடாது தொடர்ந்து மதம் மாற்றுகிறார்கள்.
200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் தமிழகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்ததால் இலங்கை மலையகத்தில் குடியேறியவர்களே சைவர்கள். கண்ணீரில் நனைந்தனர், கஞ்சியால் வயிறு நிரப்பினர். கம்பலையாகக் குடிசைகளுக்குள் வாழ்கின்றனர். ஏழைச் சைவர்கள். ஆசை காட்டலாம். மோசம் செய்யலாம். மதமாற்றிவிடலாம் என்ற மோகம் கிறித்தவ மத மாற்றிகளுக்கு. காதல் ஜிகாதிகளுக்கு.
கொழும்பில் அரசியல் செல்வாக்குடன் வாழ்கின்றவர் மதமாற்றி இராஜேந்திரன். சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர். அரசு நடைமுறைகள் தெரிந்தவர். மட்டக்களப்பில் இந்து கல்லூரி மைதானத்திலேயே மதமாற்றக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர். அதைத் தடுத்தோம் என்பது வேறு கதை.
47ஆவது மதமாற்ற மாநாட்டை நுவரெலியா குதிரைப் பந்தய மைதானத்தில் நடத்துகிறார் இராஜேந்திரன். நாளை மார்ச்சு 10 முதல் 15 வரை. இந்தியா மலேசியா பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று போதகர்களை மதமாற்றிகளை அழைத்து வருகிறார். நுவரெலியாவில் ஆறு நாள் தொடர்ந்து அவர்கள் உரையாற்றுகிறார்கள். நோய்களை மாற்றுவதாக செல்வத்தைப் பெருக்குவதாகப் பொய்களைப் புரட்டுகளை அள்ளி வீசப் போகிறார்கள்.
நுவரெலியாவின் புத்த மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். சைவ மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். கிறித்தவ மக்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். இன ஒழிப்பு நோக்கத்துடன் ஆறு நாள்கள் கூட்டம் நடத்துகிறார்கள். சிங்களத்தில் வண்ணச் சுவரொட்டிகள். தமிழில் வண்ணச் சுவரொட்டிகள். ஆங்கிலத்தில் வண்ணச் சுவரொட்டிகள். இலங்கை முழுவதும் ஒட்டி இருக்கிறார்கள். அச்சிடும் செலவு எவ்வளவு? இலங்கை முழுவதும் ஒட்டுவிக்கும் செலவு எவ்வளவு? ஏறத்தாழ இலங்கை ரூபாய் ஒரு கோடி வரை ஆகி இருக்கும்.
எங்கிருந்து வருகிறது பணம்? கொழும்பு, அலுத்மாவத்தையில் மதமாற்றி இராஜேந்திரனின் இயேசு வாழ்கிறார் மதமாற்ற அமைப்பின் கணக்குகளை அரசாங்கம் ஆராய வேண்டும். இலங்கையில் இனக் கலவரத்தை மதக் கலவரத்தைத் தூண்டுவதற்காகப் பணம் எங்கிருந்து வருகின்றது? விசாரிக்க வேண்டும். மலையகச் சைவர்கள் மனம் கொதித்தது. மலையகப் புத்தர்களில் மனம் கொதித்தது. ஆறு நாள் கூட்டத்தைத் தடை செய்யுங்கள். பாதுகாப்பு அமைச்சைக் கோரினார்கள். கொழும்பு காவல்துறைத் தலைவருக்குக் கடிதம் எழுதினார்கள். புத்த சாசன அமைச்சுக்கு கடிதம் எழுதினார்கள். நுவரெலியாக் காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டுள்ளார்கள். நுழைவது சுற்றுலாவுக்கு. குழைந்து குழைந்து பேசுவதோ மதம் மாற்றுவதற்கு. நுழைவு உரிமை விதிகளை மீறினார்கள் பிரான்ஸ் நாட்டவர், இந்திய நாட்டவர், மலேசிய நாட்டவர். அப்பட்டமாக இலங்கைச் சட்டங்களை மீறுகின்றவர்களை நாட்டை விட்டு அகற்றுங்கள். இவ்வாறு மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவை தொடர்ந்து இலங்கை
ஏற்கனவே அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்கள் அடுத்தடுத்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை இலங்கை அரசும் நாடு கடத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications