'GDP உயர்வு என்றால் 'Gas -Diesel -Petrol' விலையேற்றம் இல்லை..' பாஜகவை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி
டெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வா் நாட்டிலுள்ள கோடிக் கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, GDP என்றால் 'Gas -Diesel -Petrol' விலை என பாஜக அரசு தவறாகப் புரிந்து கொண்டதாகவும் விமர்சித்துள்ளார்,
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ 100ஐ கடந்துள்ளது.
இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை
இந்தச் சூழலில் கேஸ் சிலிண்டர் விலை இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இரண்டு வாரங்களில் 2ஆவது முறையாக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் கேஸ் சிலிண்டர் விலை 190 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ 23 லட்சம் கோடி எங்கே போனது
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு மூலம் மத்திய அரசு ரூ 23 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த 23 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது? 2014இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ 410ஆக இருந்தது. இப்போது சிலிண்டர் விலை 116% உயர்ந்து ரூ 885ஆக உள்ளது. பெட்ரோல் விலை 2014இல் 71.5 ரூபாயாக இருந்தது. இப்போது 42% உயர்ந்து ரூ 101ஆக உள்ளது. அதேபோல 57 ரூபாயாக இருந்த டீசல் விலையும் இப்போது 88 ரூபாயாக உயர்ந்துள்ளது.

GDP என்றால் என்ன
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஜிடிபி (GDP) தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கூறுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் காலத்திலும் ஜிடிபி உயரும் என்றே கூறுகிறார். அவர்கள் கூறும் GDP என்றால் என்ன என இப்போது தான் எனக்குப் புரிகிறது. GDP என்றால் 'Gas -Diesel -Petrol' விலை என அவர்கள் புரிந்து கொண்டார்கள் போல. அதனால் தான் இது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தை விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கிறது எனச் சிலர் கூறுகின்றனர். 2014இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105ஆக இருந்தது. இப்போது அது 32% குறைவாக 71ஆக உள்ளது. அதேபோல கேஸ் சிலிண்டர் விலையும் சர்வதேச சந்தையில் இப்போது 653 ரூபாயாக உள்ளது. இது 2014இல் இருந்த 880 ரூபாயைவிட 26% குறைவாகும்.

4, 5 பேரிடம் மட்டும் குவியும் செல்வம்
பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. பெட்ரோல் -டீசல் விலை உயரும் போது, இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாகவே நாட்டிலுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், நேர்மையான தொழிலதிபர்கள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நரேந்திர மோடியின் 4, 5 நண்பர்களிடம் மட்டுமே அனைத்து செல்வமும் சென்று சேர்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications