கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ரூ.4500 கோடி நிதி
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரிக்க சீரம் மற்றும் பார்த் பயோடெக் நிறுவனங்களுக்கு 4500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என பல மாநிலங்களில் அறிவிப்புகள் வெளிவரும் சூழலில் தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரிக்க சீரம் நிறுவனத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.1,567.50 கோடியும் வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் மொத்தம் ரூ.4,567.50 கோடி முன்பணம் வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜனவரி 16ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதற்கட்ட அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதன்பின்னர் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் தீவிரம்
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை விட இன்று சற்று குறைந்து உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது.

12 கோடி தடுப்பூசிகள்
இந்தியாவில் இதுவரை 12,71,29,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 26,94,14,035 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,19,486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ரூ.4500 கோடி முன்பணம்
தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரிக்க சீரம் நிறுவனத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ரூ.1,567.50 கோடியும் வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் மொத்தம் ரூ.4,567.50 கோடி முன்பணம் வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.

தடுப்பூசி விநியோகம் அதிகரிக்க திட்டம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி தட்டுப்பாட்டினை போக்கும் வகையிலும் தடுப்பூசி வினியோகத்தை அதிகரிக்கும் விதமாகவும் வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான 10 சதவிகித இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications