ரூ.8 லட்சம் வருவாய் பெறுவோருக்கு 10% இடஒதுக்கீடா?.. மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது சுப்ரீம்கோர்ட்
ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு குறித்து சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது
டெல்லி: மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்கு, வருமான உச்சவரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயித்துள்ளது குறித்து மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.. முக்கியமாக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமான உச்சவரம்பு நிர்ணயம் செய்தது எப்படி? என்ற கேள்வியை கோர்ட் எழுப்பியிருக்கிறது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், நீட் தேர்வு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும், அதேபோல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் வழங்கப்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது..
மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான வருமான உச்சவரம்பாக வருடத்துக்கு 8 லட்ச ரூபாய் என்றும் மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது..

விசாரணை
மத்திய அரசின் இந்த இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.. இந்த மனுக்களையும் சுப்ரீம்கோர்ட் அவ்வப்போது விசாரித்து கொண்டிருக்கிறது.. அந்த வகையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்றும் கோர்ட் விசாரித்தது..

இடஒதுக்கீடு வசதி
நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் நடராஜ், "இந்த உச்ச வரம்பு நிர்ணயமானது, அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும்.. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வருடத்துக்கு ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பை ஈட்டுபவர்களாக கருதப்பட்டு, அதற்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வசதி அளிக்கப்பட்டு வருகிறது... 2015ல் 6.5 லட்சமாக இருந்த இந்த உச்சவரம்பானது, 2017-ல் 8 லட்சமாக உயர்த்தப்பட்டது" என்றார்.

நீதிபதிகள்
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "முன்னேறிய வகுப்பினரை பொறுத்த வரையில், சமுதாய நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது.. இவர்களுக்கெல்லாம் ஆண்டு வருமான உச்ச வரம்பு எப்படி பொருந்தும்? பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு எதன் அடிப்படையில் ஆண்டு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது?

ஆலோசனைகள்
இதுகுறித்து விவரங்களை சேகரிக்க, ஆய்வுகள் எதாவது மேற்கொள்ளப்பட்டனவா? ஆலோசனைகள் ஏதாவது நடத்தப்பட்டுள்ளதா? இந்த ரூ. 8 லட்சம் வருமான வரம்பு என்பது மொத்த நாட்டு மக்களுக்கும் பொருந்துமா? அரசியலலைப்பு பிரிவு 15(6)ன் கீழ், முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநிலங்கள், ஆண்டு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாழ்வதற்கான செலவீனங்களில் வேறுபாடு இருக்காதா? இதுகுறித்து மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications