இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஹேப்பி மோடில் ஐடி, ஏற்றுமதி நிறுவனங்கள்! எதுக்காக தெரியுமா?
டெல்லி: சர்வதேச அளவில் நிலவும் கொந்தளிப்பான நிலையால் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் என்று அச்சம் எழுந்துள்ள நிலையில் ஐடி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. ரூபாய் மதிப்பு பலவீனம் அடைவதால் ஐடி நிறுவனங்கள் ஆசுவாசம் அடைவது ஏன் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச பொருளாதாரமும் சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளது.

இந்திய ரூபாய் வீழ்ச்சி
ஈரான் ஹர்மூஸ் நீரிணையை மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணிகளில் சந்தை கொந்தளிப்பாக காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ல் இருந்து 92.17 ஆக வீழ்ச்சியை சந்தித்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் உயரும் என்ற கவலை ஏற்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்கு சொல்லப்படுகிறது. இந்திய ரூபாய் வீழ்ச்சியை சந்திப்பது ஏன் கவலைக்குரிய ஒன்றாக பார்க்கபடுகிறது என்ற விவரங்களை பார்ப்போம். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து உள்ளது.
விலைவாசி உயர்வு அதிகரிக்கும்
ரூபாய் மதிப்பு பலவீனம் அடைதால் எண்னெய் விலை அதிகரிக்கும். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உரங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். கடைசியாக இது நுகர்வோர் தலையில் போய் விழும். இது கடைசியில் இறக்குமதி பணவீக்கத்திற்கு வழிவகுத்து விலை வாசி உயர்வு அதிகரிக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், விமானம், லாஜிஸ்டிக்ஸ், பெயிண்ட்ஸ், கெமிக்கல்ஸ், எரிசக்தியை சார்ந்துள்ள தொழிற்சாலைகள் திண்டாட்டத்திற்கு உள்ளாகும். வெளிநாட்டு கரன்சியில் லோன் பெற்றுள்ள நிறுவனங்கள் கூடுதல் பாதிப்பை சந்திக்கும். ஏனென்றால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் இந்த கடனை திருப்பி செலுத்த அதிக தொகை கொடுக்க வேண்டியிருக்கும்.
வருமானம் குறையும்
வளைகுடா நாடுகளில் நீண்டகால மோதல் ஏற்பட்டால் அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் தங்கள் பணத்தை அனுப்புவதிலும் அபாயம் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டாலர் மதிப்பில் வருமானத்தை அளவிடுகிறார்கள். ரூபாய் பலவீனம் அடைந்தால், பணமதிப்பு மாற்றும் போது அவர்களின் வருமானம் குறையும்.
இதனால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்யக்கூடும்.. இதன் காரணமாக பங்குச் சந்தையில் கொதிநிலை அதிகரிக்கும். இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படும் நிலையில், ரூபாய் பலவீனம் அடைவதை வைத்து ஏற்றுமதியாளர்கள் பயன் அடைவார்கள்.
ஐடி நிறுவன வருவாய் அதிகரிப்பு
டாலரின் வருமானம் ஈட்டிவிட்டு ரூபாயை அதிகம் செலவு செய்யும் நிறுவனங்கள் அதிக லாபங்களை பெறும். ரூபாய்க்கு மாற்றும் போது சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரும் அதிக ரூபாயை கொடுக்கும். இதனால் ஐடி சேவை நிறுவனங்கள், பாராமெடிக்கல் ஏற்றுமதியாளர்கள், ஸ்பெஷாலிட்டி ரசாயன நிறுவனங்கள் ஆகியவை அதிக லாபம் ஈட்டும் முக்கிய துறைகளாக உள்ளன.
ஐடி துறையை பொறுத்தவரை இத்தகைய ஒரு சூழல் முக்கியமான நேரத்தில் வந்து இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு காரணமாக பல ஐடி நிறுவனங்கள் மந்தமான தேவை மற்றும் இடையூறுகளை சர்வதேச அளவில் எதிர்கொண்டுள்ளன. இதனால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்பது ஐடி நிறுவனங்களுக்கு வருமானம் உயர்ந்து, அவர்களின் காலாண்டு வருவாயை மேம்படுத்த உதவும்.












Click it and Unblock the Notifications