Doomsday விமானம்.. உலக நாடுகளை குழப்பும் ரஷ்ய அதிபரின் விமானம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
டெல்லி: டெல்லியில் இப்போது பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் நிலையில், இதில் கலந்து கொள்ள புதின் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். புதின் தனது டூம்ஸ்டே விமானத்தில் இன்று காலை டெல்லி வந்திறங்கினர். அந்த விமானத்தின் சிறப்புகள் என்ன.. ஏன் புதின் அந்த விமானத்தையே எப்போதும் பயன்படுத்துகிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார். மூன்று நாள் இந்திய பயணமாக வந்துள்ள புதின், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

புதின்
உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இந்தியா வந்துள்ள புதினுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் தலைவர்களில் ஒருவரான புதின் பயணிக்கும் விமானத்தைச் சுற்றியும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் உக்ரைன் போருக்கு பிறகு புதினுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதின் எப்போதும் ரஷ்ய அதிபருக்காக மாற்றியமைக்கப்பட்ட "Ilyushin IL-96-300PU" விமானத்தில் தான் பயணம் செய்வார். இந்த விமானத்தை பிளையிங் கிரெம்ளின் அல்லது டூம்ஸ்டே விமானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை புதின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், ஒரே மாதிரியான இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் வந்துள்ளது.
இரட்டை விமானம்
அதாவது புதின் எந்த விமானத்தில் பயணிக்கிறார் என்பது தெரிந்தால் அதை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது. அதில் இருந்து தப்பிக்கவே, இதுபோல இரு ஒரே மாதிரியான விமானத்தை பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் புதின் எந்த விமானத்தில் இருக்கிறார் என்பதை வெளியாட்கள் யாராலும் உறுதியாக அடையாளம் காண முடியாது. இதற்காக ஒரே மாதிரியான இரண்டு Ilyushin IL-96-300PU விமானங்களை பயன்படுத்தியுள்ளனர். அதில் ஒன்றில் மட்டுமே புதின் பயணம் செய்யும் நிலையில், மற்றொன்று எதிரிகளை குழப்ப உடன் இயக்கப்படும்.
புதின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோல போலி விமானம் இயக்கப்படுவது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்புமே கூட இதுபோல போலி விமானங்களை இயங்கி எதிரிகளை குழப்பியுள்ளனர். ரஷ்யா தனது அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த சில ஆண்டுகளாகவே இந்த இரட்டை விமான நடைமுறையை பயன்படுத்தி வருகிறது.
பிளையிங் கிரெம்ளின் என்றால் என்ன?
புதினின் அதிகாரப்பூர்வ விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட Ilyushin IL-96-300 விமானமாகும். இதில் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சில விஷயங்களை மட்டும் மாற்றி அமைத்துள்ளனர். 1980களில் இலியூஷின் டிசைன் பீரோ உருவாக்கிய இந்த விமானம், ரஷ்ய அதிபரின் பாதுகாப்பை உறுதி செய்ய பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டது.
நான்கு என்ஜின்களை கொண்ட நீண்ட தூர விமானமான இது, ஒரே முறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 11,000 கி.மீ. வரை பயணிக்கக்கூடியது. இதனால் நீண்ட தூர பயணங்களில் அடிக்கடி எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது. இந்த விமானம் 55.35 மீட்டர் நீளமும், 60.12 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டது. ரஷ்ய அதிபரின் அனைத்து விமானப் பயணங்களையும் கையாளும் பாதுகாப்பு படையை இதில் இருந்து இயக்குவார்களாம்.
பாதுகாப்பு & வசதிகள்
மேலும், அவசர காலங்களில் ரஷ்யாவை கண்ட்ரோல் செய்யும் முழுமையான மொபைல் கட்டுப்பாட்டு மையமாகவும் செயல்படும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணுவம், உளவுத்துறை மற்றும் அரசு அமைப்புகளுடன் பாதுகாப்பான முறையில் தொடர்பு கொள்ள என்கிரிப்டட் தகவல் தொடர்பு அமைப்புகள் இதில் உள்ளன. ரேடார் ஜாமிங் தொழில்நுட்பம், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், சாட்டிலைட் இணைப்புகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட ரேடியோ, டேட்டா சேனல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் பாதுகாப்பான தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியும்.
பாதுகாப்பு அம்சங்கள் ஒரு பக்கம் என்றால் ரஷ்ய அதிபர் சவுகரியமாக பயணிக்கவும் தேவையான பல வசதிகள் இதில் உள்ளன. அதிபருக்காக தனிப்பட்ட படுக்கையறைகள், ஆடம்பர குளியலறைகள், சமையலறை, உணவு அருந்தும் பகுதி மற்றும் பெரிய மாநாட்டு அறை உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன. தங்க முலாம் பூசப்பட்ட பொருட்கள், உயர்தர மர வேலைப்பாடுகள் மற்றும் பிரீமியம் இருக்கைகள் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளும் இந்த விமானத்தில் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications
