இனி சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்கள் இருமுடியை கொண்டு செல்ல அனுமதி! ஆனால்...!
டெல்லி: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது இருமுடி பைகளை தங்களுடன் எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை இந்த சிறப்பு அனுமதி நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை. இங்குள்ள ஐயப்பனை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

அவர்கள் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சபரிமலைக்கு பலர் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், ரயில்கள், கார்களில் சென்று வருகிறார்கள். அது போல் சிலர் விமானங்களிலும் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் இருமுடி கொண்டு செல்ல அனுமதி இல்லை.
அதற்கு பதிலாக அவர்கள் மாலை அணிந்து விரதத்தை கடைப்பிடித்துக் கொண்டு விமானம் மூலம் சபரிமலைக்கு சென்று அங்கு இருக்கும் குருசாமிகளிடம் இருமுடி கட்டிக் கொள்கிறார்கள். இந்த நிலையில் இந்த முறை சபரிமலை பக்தர்கள் விமானத்தில் நெய், தேங்காய் கொண்ட இருமுடி பைகளை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்காக பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்திற்கு தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கும் போது எக்ஸ்ரே, இடிடி (அதாவது வெடிபொருட்களை அடையாளம் காணும் கருவி) ஆகியவற்றின் மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகே பக்தர்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.
மகரஜோதி தரிசனத்துடன் சபரிமலை சீசன் நிறைவடையும் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை இந்த சிறப்பு அனுமதி நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications