குஜ்ஜார், மீனா சமூகத்தினரின் செல்வாக்குடன் பாஜகவில் இணைவாரா சச்சின் பைலட்
டெல்லி: ராஜஸ்தானில் குஜ்ஜார் மற்றும் மீனா சமூகத்தினரிடையே சச்சின் பைலட்டுக்கு உள்ள செல்வாக்கால் அவர் பாஜகவுக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ராஜஸ்தானில் மத்திய பிரதேசத்தை போன்று அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த முறை கிளர்ச்சியை ஏற்படுத்தியவர் ராகுலுக்கு நெருக்கமானவராக கூறப்படும் சச்சின் பைலட்.
கணிசமான தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் சச்சின் பைலட் முகாமிட்டுள்ளார். இரு முறை நடந்த எம்எல்ஏக்களின் கூட்டத்தில் சச்சின் பைலட்டிற்கு அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.

குஜ்ஜார்
ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சமரசம் செய்தும் சச்சின் பைலட் சமாதானம் ஆகவில்லை. இந்த நிலையில் சச்சின் பைலட் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பாஜகவுக்கு சிறந்த தேர்வாகவும் இருப்பார் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவருக்கு இருக்கும் குஜ்ஜார் மற்றும் மீனா சமூகத்தினரின் ஆதரவுதான்.

இடஒதுக்கீடு
கடந்த 20 ஆண்டுகளாக ராஜஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இந்த சமூகத்தினர் என கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இரு சமூகத்தினருக்கு இடையே கடும் பகையும் போட்டியும் நிலவி வந்தது. இரு சமூகத்தினரும் அந்த மாநிலத்தில் இடஒதுக்கீடு பிரச்சினையை சந்தித்தன.

சச்சின் பைலட்
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தானில் இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சச்சின் பைலட். இவர்தான் இந்த இரு சமூகத்தினரிடையே உள்ள பிரச்சினையை பிரசாரம் செய்து முடிவு கொண்டு வந்தார். ராஜஸ்தானில் ஜாதி மத பேதமில்லாததற்கு சச்சின் பைலட் ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளார்.

5 எம்எல்ஏக்கள்
இதனால் இவர் பாஜகவுக்கு சிறந்த தேர்வாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இரு சமூகத்திலும் குறைந்தபட்சம் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு சச்சின் பைலட்டிற்கு உண்டு. அது போல் 5 மீனா சமூக எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

பாஜகவுக்கு சிறந்த தேர்வு
சச்சின் பைலட்டே குஜ்ஜார் இனத்தை சேர்ந்தவர் என்றாலும் அனைத்து சமூகத்திலும் அவர்களுக்கு செல்வாக்கு உள்ளது. பாஜகவில் மீனா சமூகத்திற்கு மனக்கசப்பு உள்ளது. இந்த மனக்கசப்பை சச்சின் பைலட் சரிகட்டுவார் என தெரிகிறது. பாஜகவை தொடர்பு கொள்ளவில்லை என சச்சின் பைலட் தெரிவித்தாலும் குஜ்ஜார் மற்றும் மீனா சமூகத்தினரிடையே உள்ள அவரது செல்வாக்கு அவரை பாஜகவுக்கு இழுத்து செல்லும் என தெரிகிறது.

துணை முதல்வர்
இந்த நேரத்தில் மீனா சமூகத்தினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புமோ என்று பாஜக அச்சப்படத் தேவையில்லை. எனவே பாஜக தயக்கமின்றி சச்சின் பைலட்டை தங்கள் கட்சியில் இழுக்க முடியும். இன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்காததை அடுத்து அவர் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications