அசத்தும் அகிலேஷ் யாதவ்.. பாஜகவை வீழ்த்த அடுத்தடுத்து உறுதியான கூட்டணிகள்.. அனல் பறக்கும் உ.பி. களம்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி , சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜாட் இன மக்களின் வாக்குகளை பெறும் முயற்சியாக ராஷ்டிரீய லோக் தளம் கட்சியோடும் கூட்டணியை உறுதி செய்துவிட்டார் அகிலேஷ் யாதவ். இன்னொரு பக்கம் மாநிலம் தழுவிய அளவிலும் அகிலேஷ் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார் ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் தேசியவாத காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியை பேசி முடிவு செய்துள்ளனர். ஆனால் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்று சரத் பவார் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் . இதன் ஒரு பகுதியாக சமாஜ்வாதி கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அகிலேஷ் யாதவும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார்.

பாஜகவுக்கு எதிராக அகிலேஷ் யாதவ்
கடந்த வாரம் கட்சித் தொண்டர்களிடையே பேசிய அகிலேஷ் யாதவ், பாஜக ஒரு மக்கள் விரோத கட்சி, வெறுப்பு என்ற ஒற்றை விஷயத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அடுத்த ஆண்டு, உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தான் ஒரே ஆயுதம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் , உத்தரபிரதேச மாநிலத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு நாம் இரவு பகலாக உழைக்க வேண்டும் என்றும் கட்சி தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார் . பாஜக பல்வேறு தந்திரங்களைக் கையாளும் அந்த விஷயத்தை நாம் உஷாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம்
மாநிலம் முழுவதும் கட்சியை வளர்ப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாக மாநிலம் தழுவிய அளவில் அவர் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், இந்த ஆண்டு ஏப்ரல் வரை அகிலேஷ் யாதவ் சுமார் 40 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது கட்ட பயணத்தை அவர் ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அவர் மீண்டும் சுற்றுப்பயணத்தை உடனே தொடங்காமல் ஒத்திப் போட்டு இருந்தார்.

மாயாவதி சுற்றுப் பயணம் செல்லவில்லை
அகிலேஷ் யாதவ் செல்லக்கூடிய இடங்களில் அவருக்கு அதிக அளவில் கூட்டங்கள் வருவதாகவும், இது பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதை பிரதிபலிப்பதாகவும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார் . அதேநேரம் சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு அரசியல் எதிரியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எங்குமே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை . காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் அதன் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு சில பகுதிகளில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அகிலேஷ் யாதவ் மட்டும்தான், இப்போதைய நிலையில் பாஜகவிற்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார் என்பதுதான் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கள யதார்த்தமாக இருக்கிறது .

ஜாதி, மத ஓட்டு கணக்கு
சுற்றுப் பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் செய்வது மட்டும் கிடையாது, ஜாதி மற்றும் மத அடிப்படையில் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதுில் பல்வேறு கணக்குகளை போட்டு காய் நகர்த்தி வருகிறார் அகிலேஷ் யாதவ். உத்தர பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் ஜாட் இன மக்கள் அதிகமாக இருக்கிறார்கள் . எனவே ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார் அகிலேஷ் யாதவ். கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரியுடன் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்துள்ளார். சமாஜ்வாதி கட்சிக்கு யாதவர்களின் வாக்கு வங்கி இருக்கிறது, ஜாட் இன மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இந்த கூட்டணி செயலாற்ற உள்ளது.

ஜாட் இன மக்கள் ஓட்டு
டெல்லியில் சமீபத்தில் ஜெயந்த் சவுத்ரியை அகிலேஷ் யாதவ் சந்தித்து பாஜகவுக்கு எதிரான வியூகம் தொடர்பாக விவாதித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களான முசாபர்நகர், மீரட் மற்றும் சில பகுதிகளில் ஜாட் இன மக்களின் வாக்குகள் கணிசமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் சுமார் 40 சதவீதம் வாக்காளர்கள் ஜாட் மற்றும் முஸ்லிம்களாகும். பாஜகவுக்கு எதிராக இவர்களை அணிதிரள செய்தால் அது மிகப்பெரிய வாக்கு வங்கியாக உருவெடுக்கும் என்பது அகிலேஷ் யாதவ் கணக்கு.

ராஷ்டிரிய லோக் தளம்
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி, 357 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. பல தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். 2019 லோக்சபா தேர்தலின் போது ராஷ்டிரிய லோக்தளம் கட்சியின் தலைவராக இருந்த அஜித் சிங் மற்றும் ஜெயந்த் சவுத்ரி இருவருமே தோற்றுப் போயினர் . எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.

செல்வாக்கு அதிகரிப்பு
2013ஆம் ஆண்டு முசாபர்நகர் மாவட்டத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக வாக்குகளை ஒரே பக்கமாக திருப்ப முடியாமல் ராஷ்டிரிய லோக்தளம் தோல்வியைத் தழுவியதாக கூறப்பட்டது . ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களின் மூலமாக ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்று உள்ளார் ஜெயந்த் சவுத்திரி. இதன் மூலமாக மேற்கு மாவட்டங்களில் அவரது செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications