ஓவரா ஆடாத.. வார்த்தையைவிட்ட கிளாசன்.. சஞ்சு சாம்சன் கொடுத்த பதிலடி.. சண்டையை நிறுத்திய சிவம் துபே!
சென்னை: சிஎஸ்கே அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் ஐதராபாத் அணியின் கிளாசன் இருவரும் களத்தில் மோதிக் கொண்டது ரசிகர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது. கிளாசனை ஸ்டம்பிங் செய்ததால் டென்ஷனான அவர், உடனடியாக சஞ்சு சாம்சனிடம் வார்த்தையை விட்டார். அப்போது சஞ்சு சாம்சனும் பதிலடி கொடுக்க, சிவம் துபே இடையில் புகுந்து மோதலை தடுத்து நிறுத்தினார்.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஹெட் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அபிஷேக் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் - கிளாசன் கூட்டணி பொறுப்புடன் விளையாடியது. முதல் சில ஓவர்களில் நிதானம் காட்டினாலும், அடுத்ததாக கிளாசன் அதிரடியில் விளாசி தள்ளினார். குறிப்பாக அகீல் ஹொசைன் மற்றும் நூர் அஹ்மத் இருவரும் கிளாசன் அடித்த அடி சிஎஸ்கே ரசிகர்களை மிரள வைத்தது.
3வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், நூர் அஹ்மத் வீசிய பந்தில் கிளாசன் 47 ரன்கள் எடுத்திருந்த போது சஞ்சு சாம்சனால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஸ்டம்பிங் செய்த அடுத்த நொடியே சஞ்சு சாம்சன் பந்தை தூக்கி போட்டு உற்சாகம் அடைந்தார். இதனால் கிளாசன் உடனடியாக கோபத்தை காட்டினார்.
இது 3வது நடுவரால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கிளாசனின் கால்கள் காற்றில் இருக்க, சஞ்சு சாம்சன் சரியான நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார். இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சஞ்சு சாம்சனை நோக்கி வந்த கிளாசன், சில வார்த்தைகளை கோபமாக வெளிப்படுத்தினார். அதற்கு சஞ்சு சாம்சனின் பதிலுக்கு சில வார்த்தைகள் சொல்ல, சூழல் பரபரப்பானது.
இதன்பின் அங்கிருந்த சிவம் துபே கிளாசனிடம் பேசி அனுப்பி வைத்தார். கிளாசனின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் ஐதராபாத் அணிக்கு எதிராகவும் சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றன்ர். ஐபிஎல் தொடரில் நேரடியாக ரசிகர்கள் இப்படி மோதிக் கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications