திமுகவை அதிகம் எதிர்ப்பவர்கள் பக்கம் போவோம்.. நேரடியாக சொன்ன ஆதரவாளர்கள்! எஸ்பி வேலுமணி முடிவு என்ன?
கோவை: யார் திமுகவை அதிகம் எதிர்க்கிறார்களோ, அங்கு போகலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். விஜயபாஸ்கர் பாணியில் எஸ்பி வேலுமணியும் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டுள்ள சூழலில், விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் கட்சிப் பதவியை பறித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு மாதத்திற்கு பின் அதிகாரமில்லாத டம்மி பதவியை வழங்கியுள்ளார். இதனிடையே அதிமுகவின் 6 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் நாளை மறுநாள் தவெகவில் ஐக்கியமாக இருக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா படலம் தொடரும் என்று சொல்லப்படுகிறது. இந்த லிஸ்டில் அடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருப்பதாக சொல்லப்படுகிறது. அவருக்கு அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரின் ஆதரவாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகள் மீண்டும் அளிக்கப்படவில்லை. இதனால் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்று எஸ்பி வேலுமணி அறிவித்துள்ளார். இதனிடையே நேற்றிரவு எஸ்பி வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.
அந்த கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள், செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், ஓபிஎஸ் என்று எத்தனையோ பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களை சேர்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னவர்களையும் சேர்த்து நீக்கினார். அவர் அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்தபின், சேர்ந்தவர்களுக்கு போட்ட கையெழுத்தை விடவும் நீக்குவதற்கு போட்ட கையெழுத்து அதிகம்.
அதனால் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க மாட்டார். இனி நாம் திமுகவை யார் அதிகம் எதிர்க்கிறார்களோ, அந்த பக்கம் போகலாம்.. நீங்களே எடுப்பது எங்களின் முடிவு என்று தெரிவித்துள்ளனர். இதனால் எஸ்பி வேலுமணி விரைவில் அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தவெகவில் விஜயபாஸ்கர் இணைந்த பின் எஸ்பி வேலுமணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. எஸ்பி வேலுமணி தவெகவில் இணையும் பட்சத்தில் கோவை மாநகராட்சி தேர்தலில் தவெகவால் எளிதாக வெல்ல முடியும். இதனை கணக்கில் கொண்டு எஸ்பி வேலுமணிக்கு பெரிய பொறுப்பும் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications