கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட வழக்கு.. நீதிபதிக்கு வர்மாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அவர் மீது சில நடவடிக்கையை எடுத்திருந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து வர்மா மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அமர்வில் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "இந்த மனு இப்படி தாக்கல் செய்யப்பட கூடாது. உச்ச நீதிமன்றமே உங்களுக்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது அப்படித்தானே?" என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும், "உங்கள் மனுவில் பிரதிவாதியாக உச்சநீதிமன்றத்தை சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் குழுவின் அறிக்கை மனுவுடன் இணைக்கப்படவில்லை. அறிக்கை எங்கே?" என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
நீதிபதி வர்மா தாக்கல் செய்த மனுவில் தனது பெயரை XXX என்று குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய பெயர் வெளியில் தெரிய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் அதை மறுத்த நீதிபதிகள், போக்சோ குற்றத்திற்கு மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று விளக்கினர். வழக்கில் நீதிபதி வர்மாவுக்கு ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுவதை குறிப்பிட்டு
"அரசியலமைப்பு விதிகளின்படி, நீதிபதிகளின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. நீதிபதி வர்மா மீதான நடவடிக்கை, சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. நீதிபதிகள் மீது ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளும், பொதுவெளியில் எழும் பொத்தாம் பொதுவான விமர்சனங்களும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும். தீ விபத்து ஏற்பட்டதை அணைக்க வரும்போது பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் நீதிபதி வர்மா, அவரது ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை" என்று வாதிட்டார்.
ஆனால் இந்த வாதத்தை மறுத்த நீதிபதிகள், வர்மாவின் ஊழியர்கள் அங்கு இருந்ததாகவும், காவல்துறையினரும் அதை பார்த்ததாகவும் கூறியிருகின்றனர். ஆரம்பத்தில் குழு அமைக்கப்பட்டு, வர்மாவிடம் உள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு ஒத்துழைப்பு அளித்த வர்மா இப்போது விசாரணை அறிக்கை மீதான நடவடிக்கை கூடாது என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது? குழு அமைக்கப்பட்டபோதே அதை எதிர்த்திருக்கலாமே? அறிக்கை வரும் வரை ஏன் காத்திருந்தீர்கள்? நீங்கள் ஓர் அசியலமைப்பு அதிகாரி என்று தெரியாதா?" என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications