கொல்கத்தா கமிஷனர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிரடி
Recommended Video

டெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
சாரதா நிதி நிறுவனம் மற்றும் தி ரோஸ்வேலி ஊழல் தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் நேற்று இரவு அவரது வீட்டுக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கைது செய்தது.
இதுகுறித்து தகவலறிந்த மம்தா பானர்ஜி சம்பவ இடத்துக்கு வந்தார். மாநில அரசிடம் அனுமதி பெறாமல் காவல் துறை ஆணையரிடம் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா நேற்று முன் தினம் முதல் 3-ஆவது நாளாக இன்றும் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மனு தாக்கல்
இந்த நிலையில் மோசடி வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க ராஜீவ் குமாருக்கு உத்தரவிட கோரியும், சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கொல்கத்தா போலீஸார் சிறை வைத்தது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை
இதுகுறித்து அவசர வழக்காக விசாரணை நடத்த கோரிய சிபிஐயின் கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள் இன்று விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளதை அடுத்து அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபக் குப்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

நோட்டீஸ்
அப்போது கொல்கத்தா கமிஷனர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சிபிஐ சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன் என கேட்டு கமிஷனர் ராஜீவ் குமார், மேற்கு வங்க அரசு, மாநில டிஜிபி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ராஜீவ் குமார் சம்மன் அனுப்பியும் ஆஜராக நிலையில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

ஒத்திவைப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிறகு பார்த்து கொள்ளலாம் என நீதிபதிகள் கூறினர். மேலும் சிபிஐ அதிகாரிகள் 15 பேரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தது தொடர்பான வழக்கை வரும் 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications