உமர் காலித் ஜாமீன் வழக்கு.. டெல்லி போலீசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி: டெல்லி கலவர வழக்கில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாணவர் உமர் காலித் உட்பட 5 மாணவர்களுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறைக்கு காரணம் என்று கூறி ஜேஎன்யு பல்கலை மாணவர் தலைவர் உமர் காலித் உட்பட ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது UAPA சட்டம் பாய்ந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணை நடக்கவில்லை என்று மாணவர்கள் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஜாமீன் கோரியும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு ஏற்கெனவே மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் மாணவர் தலைவர் உமர் காலித் உட்பட 5 பேருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது என மாணவர்கள் தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியிருந்தர். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த 5 மாணவர்களுக்கு தீபாவளிக்கு முன்னர் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை (செப். 19) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாததற்கு நீதிபதி குமார் வருத்தம் தெரிவித்தார். அவரது அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி மன்மோகன், ஒரு காலத்தில் கபில் சிபலின் அறையில் உதவியாளராக இருந்ததால், வழக்கிலிருந்து விலக விரும்பியதாகவும் எனவேதான் தமாதமாகியது என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு டெல்லி போலீசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். இந்த வழக்கு மீண்டும் அக்.7ம் தேதியன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications