”புண்படுத்துகிறது” கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக்கோரி மனு..தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிலவிய பல்வேறு சாதிய மற்றும் பிறபோக்குதனங்களை சீர்திருத்தியவர்களில் பெரியாருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. திராவிட கழகத்தின் மாபெரும் தலைவரான பெரியார் சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம், கடவுள் மறுப்பு என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கியவர்.
சாதி, பெண் முன்னேற்றம், கடவுள் மறுப்பு, தமிழ், திராவிடம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியவர். வாழ்நாள் முழுக்க சாதியத்திற்கு எதிராக போராடிய தந்தை பெரியாரின் சிலைகளை, தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

பெரியார் சிலை
இளைய சமுதாயத்தினரும் பெரியாரின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வாழ்க்கையில் பிற்போக்குதனங்களை விடுத்து முன்னேற வேண்டும் என்று அடிப்படையில் அந்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல் அந்த சிலைகளுக்கு கீழ், பெரியார் கூறிய இறை மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் மனு
இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் வாதம்
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடவுள் மறுப்பு அடங்கிய வாசகங்கள் இடம்பெற்றுள்ள சிலைகளை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்புடுத்துவதாக தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு நோட்டீஸ்
இதனைத்தொடர்ந்து பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications