கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து! பாஜக அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய கோரி.. உச்சநீதிமன்றத்தில் மனு
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தலைமையேற்று நடத்திய, அதைப்பற்றி செய்தியளார்களுக்கு விளக்கமளித்த கர்னல் சோபியாவை குரேஷி குறித்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மனுவை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர். ஜெய தாக்கூர் என்பவர் தாக்கல் செய்திருக்கிறார். அமைச்சர் ஷாவின் இக்கருத்து, இந்திய அரசியலமைப்பின் சரத்து 164(3)-ஐ மீறுவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையின்போது, இந்திய விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாத தளங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் குறித்து கர்னல் சோஃபியா குரேஷி ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். இதன் மூலம் அவர் அந்த நடவடிக்கையின் முக்கிய முகமாக அறியப்பட்டார்.
இந்நிலையில் பாஜக அமைச்சர் விஜய் ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், சோபியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கள் அரசியலமைப்புச் சட்டம் 164(3)-ன் கீழ் எடுக்கப்பட்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானவை என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது அட்டவணையில், அரசியலமைப்புப் பதவிகளை வகிப்பவர்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழிகள் மற்றும் பிரமாணங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
அதில், "சட்டத்தின்படி, அனைத்து மக்களிடமும் எந்தவித பாரபட்சமும் இன்றி, அச்சுறுத்தலோ அல்லது விருப்பு வெறுப்போ இல்லாமல் நியாயமாக நடந்துகொள்வேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் பாஜக எம்பியின் கருத்து, முஸ்லிம் சமூகத்தினரிடையே பிரிவினைவாத எண்ணங்களைத் தூண்டி, இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்களைப் பிரிவினைவாதிகளாகக் கருதி, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படத் தூண்டுகிறது என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாஜக அமைச்சர் பதவியேற்றபோது "நான், கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன், சட்டத்தால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்புக்கு உண்மையான விசுவாசத்தையும் பக்தியையும் கொண்டிருப்பேன். இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் காப்பேன், மாநில அமைச்சராக எனது கடமைகளை உண்மையாகவும் மனப்பூர்வமாகவும் நிறைவேற்றுவேன், பயம், தயவு, பாசம் அல்லது விரோதம் இல்லாமல் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின்படி எல்லா மக்களுக்கும் சரியானதைச் செய்வேன்" என்று உறுதியேற்றிருந்தார்.
இப்படி உறுதியேற்றவர் எப்படி இஸ்லாம் மதத்திற்கு எதிராக பேசலாம் என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று பூதாகரமாக வெடித்தது. கடந்த மே மாதம் 19ம் தேதி, மத்தியப் பிரதேசத்தைச் சேராத மூன்று மூத்த IPS அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு, பாஜக அமைச்சர் மீதான FIR-ஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவரது கைதுக்கு நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications