ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு.. உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் இணையத்தில் வெளியானது
டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்திருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது. இது தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு ஆதரவானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த தீர்ப்பின் நகல் அனைத்து மாநில ஆளுநர்களின் செயலாளர்களுக்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 12 மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்திருந்தார். எனவே, 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.
நீதிமன்றம் வரை விவகாரம் சென்ற பின்னர் 2 மசோதாக்களை மட்டும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். கால தாமதம் தொடர்பாக கேள்விகள் எழுந்தபோதெல்லாம், ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அந்த மசோதாக்கள் காலாவதியாகிவிடும் என்று சொல்லப்பட்டது. எனவே மீண்டும் 10 மசோதாக்களும் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதும் கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
குடியரசுத் தலைவரோ, 1 மசோதாவுக்கு ஓப்புதல் அளித்து 7 மசோதாக்களை நிராகரித்திருந்தார். மீதமிருந்த 2 மசோதாக்கள் மீது எந்த வித முடிவும் எட்டப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் சூடுபிடித்தது. வழக்கு விசாரணையையடுத்து கடந்த 8ம் தேதி நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு கொடுத்திருந்தது. தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக வந்தது.
அதாவது ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மட்டுமல்லாது தனது சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
மேலும், "இந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்க மறுத்தது சட்டப்படி தவறு. இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததும் சட்டவிரோதம். இந்த விவகாரத்தில் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கை எடுத்திருந்தாலும் அது செல்லாது. எனவே இந்த 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்" என்று தீர்ப்பளித்திருந்தனர்.
தீர்ப்பின் நகல் இன்று இணையத்தில் முழுமையாக வெளியாகியுள்ளது. மாநில அரசின் உரிமைகளை நிலை நாட்டும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருப்பதாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் தெரிவித்திருக்கின்றன. தீர்ப்பையும் வரவேற்றிருக்கின்றன.












Click it and Unblock the Notifications