சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சாசனப் பிரிவு கடந்த மாதம் 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சிறுவர்களும் கூட தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறார் உரிமை செயற்பாட்டாளர்கள் இனாக்ஷி கங்குலி, சாந்தா சின்ஹா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இவர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஹுஷேஃபா ஆஜராகி கருத்துகளை முன்வைத்தார்.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த அறிக்கையை ஒருவாரத்துக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் மக்கள் உயர்நீதிமன்றத்தை நாட முடியவில்லை என்கிற வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த புகார் நிராகரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் ஜம்மு காஷ்மீரில் 5 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக அம்மாநில நிர்வாகம் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications