எடப்பாடிக்கு எதிரான ரூ 4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு.. உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்புடைய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஒரு வார காலத்திற்கு தள்ளி வைத்தது.
அதிமுகவின் 2016-2021 ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி மீது ரூ4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை 2018-ல் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்தது, வண்டலூர் - வாலாஜா சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டதில் முறைகேடு உள்ளிட்டவை அந்த வழக்கில் புகார்களாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன.

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி இருந்தார். இவ்வழக்கில் 2018-ல் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு, உச்சநீதிமன்றம் போனது. ஆனால் வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கே வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் டிஸ்மிஸ் செய்தார்.
மேலும் ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018 இல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார், அதில் புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேண்டியவர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழங்கினார் என்பதற்கும் சுயலாபம் அடைந்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளார். இதனால் ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடு காணமுடியாது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை என உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் அண்மையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதிகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications