"ஜப்பானையே தூக்கி சாப்பிட்டுவிடும்.. இந்திய ரயில்வே தான் பெஸ்ட்!" புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு இளைஞர்
டெல்லி: நமது நாட்டில் ரயில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், தனது அனுபவத்தை வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். இந்திய ரயில்கள் மிகச் சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் ரயில்கள் சிறப்பாக இருப்பதாகப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நமது நாட்டில் மிக முக்கியமான ஒரு பொது போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. பல்வேறு காரணங்களாகப் பொதுமக்கள் ரயில் பயணங்களையே விரும்புகிறார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி இப்போது பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் கூட நமது இந்திய ரயில்வே பிடித்துப் போக ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி
அப்படித் தான் தனது இந்திய ரயில் பயண அனுபவம் குறித்து ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டானது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பலரும் வியூஸ்காக இந்தியாவை வேண்டும் என்றே குறை சொல்லும் நிலையில், இவரது நடுநிலையான பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இது இந்தியர்களைப் பெருமை கொள்ள வைப்பதாக இருக்கிறது.
அந்தச் சுற்றுலாப் பயணி தனது வீடியோவில், தனது இந்திய ரயில் பயணம் ஆச்சரியமளிக்கும் அளிக்கும் வகையில் மிக சிறப்பாக இருந்ததாகவும் புரோபஷனலாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார். டிக்கெட் பரிசோதனை முதல் சீட் வசதி வரை அனைத்தும் சூப்பராக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அவர் தனது வீடியோவில், "ரயில் நிலையங்களில் எந்தச் சோதனை அல்லது தடையும் இல்லை. ரயில் புறப்பட்டு ஒரு நிமிடம் கூட ஆகாத நிலையில், டிக்கெட் பரிசோதகர் வந்தார். எனது டிக்கெட்டை சரிபார்த்தார். என் பெயரையும் உறுதி செய்தார். இது மிகவும் புரோபஷனலாக இருந்தது" என்றார்.
ஜப்பானை விட சிறந்தது
மேலும், அதோடு நிற்காமல் இந்திய ரயில்வே சேவையை உலகின் பல புகழ்பெற்ற ரயில் அமைப்புகளுடன் ஒப்பிட்டு அவர் பாராட்டியுள்ளார். அவர் மேலும், "ஜப்பான், தைவான், கொரியா ஆகிய நாடுகளில் நான் பயணித்த அனைத்து ரயில்களையும் விட, இந்த இந்திய ரயிலில் எனக்குச் சவுகரியமாகப் பயணிக்க அதிக இடம் கிடைத்தது" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ரயிலில் மிகச் சிறந்த வசதி மற்றும் பிரைவசி மிகக் குறைவான கட்டணத்தில் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பகல் நேர ரயில்களிலேயே பிரைவசிக்காக திரைச்சீலைகள் இருப்பதாக அவர் கூறினார். இந்தியன் ரயில்வேயில் 2ம் வகுப்பு ஏசி கோச்களில் எல்லா இருக்கைகளுக்கும் திரைச்சீலைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஞ்சி நிற்கிறது
இது தொடர்பாக மேலும் அவர் "நிஜமாகவே சொல்கிறேன்.. இந்த ரயில் மற்ற அனைத்து ரயில்களையும் மிஞ்சி நிற்கிறது. ஸ்காட்லாந்தில் இருந்து லண்டன் செல்லக் கூட £80 (சுமார் ரூ.8,500) செலவாகும். அவ்வளவு கொடுத்தாலும் சவுகரியமாக அமரும் அளவுக்கு இடம் இருக்காது. ஆனால், இது அற்புதமான அனுபவம்" என்று சிரித்தபடி அவர் கூறியுள்ளார்.
நெட்டிசன்கள்
கடந்த ஜூன் மாதம் அவர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், அதை இப்போது பலரும் மீண்டும் பகிர்ந்த டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்தியப் பயனர்கள் பலரும் அந்த நபரை பாராட்டி வருகிறார்கள். வெளிநாட்டுப் பயணிகள் இந்திய ரயில்வேயை பாராட்டுவது மகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். நெட்டிசன் ஒருவர், "இந்தியாவில் நீண்ட தூர ரயில் பயணம் செய்யவில்லை என்றால், நீங்கள் இன்னும் அதன் ஆன்மாவை உணரவில்லை என்று அர்த்தம்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications