அடேங்கப்பா! பெட்ரோல் டீசல் வரி 26 லட்சம் கோடி வசூல்! மக்களுக்கு என்ன கிடைத்தது? ப.சிதம்பரம் கேள்வி?
டெல்லி : பாஜக அரசு அமைந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எரிபொருள் வரியாக 26 லட்சம் கோடி ரூபாயை வசூலித்த நிலையில், அதற்கு ஈடாக மக்களுக்கு என்ன கிடைத்தது என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், அதுவரை நூறு நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இன்றி தொடர்ந்தது.
உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

பெட்ரோல் டீசல் விலை
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 104 டாலராக உள்ளது. விலை அதிக மாற்றமின்றி தொடரும் போதும் விலை உயர்த்தப்பாட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் உச்சம்
கடந்த 13 நாட்களில் தொடர்ந்து 11 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம் தினம் புது உச்சம் தொட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 109 ரூபாய் என்ற அளவுக்கு சென்றுவிட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 108. 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு, 99.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை விரையில் 100 ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப.சிதம்பரம் கேள்வி
இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலையில், இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்நிலையில் பாஜக அரசு அமைந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எரிபொருள் வரியாக 26 லட்சம் கோடி ரூபாயை வசூலித்த நிலையில், அதற்கு ஈடாக மக்களுக்கு என்ன கிடைத்தது என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

26 லட்சம் கோடி வரி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரிகளாக மக்களிடம் இருந்து ரூ.26 லட்சத்து 51 ஆயிரத்து 919 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. இதை வைத்து பார்க்கும்போது, ஒவ்வொரு குடும்பத்திடம் இருந்தும் சராசரியாக தலா ரூ. 1 லட்சத்தை அரசு வசூல் செய்துள்ளது. ஒரு சராசரி குடும்பத்திற்கு, இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன பெற்றுள்ளோம் என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications