ரியல் எஸ்டேட்.. அதென்ன ரியல் எஸ்டேட் சட்டம்.. முதலிடம் யார்னு பாருங்க.. மத்திய அரசின் மேஜர் அட்வைஸ்
டெல்லி: ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து மத்திய அரசு ஆய்வு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அத்துடன் முக்கிய அட்வைஸ் ஒன்றையும் தெரிவித்திருக்கிறது.
வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது.

மனை விற்பனை: அதன் அடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" (Tamil Nadu Real Estate Regulatory Authority TNRERA) செயல்பட்டு வருகிறது
2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன.
அறிக்கை வெளியீடு: அதன்படி, 5,000 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்.. "ரெரா" சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் வந்தால், ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க முடியாது..
அதனால் வீடு அல்லது மனை வாங்குவோர், கட்டுநரின் பெயர், முகவரி, வங்கி தகவல்கள், நிறுவனத்தின் பெயர், இப்போதைய நிலை, எப்போது முடிவடையும்? போன்ற தகவல்களை எல்லாம் www.tnr-e-ra.in என்ற வெப்சைட்டின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

இப்படி, மாநில வாரியாக ரியல் எஸ்டேட் சட்டம் அமலாகும் விதம் குறித்து, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆய்வு செய்து, சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு: அந்த அறிக்கையில் உள்ளதாவது: ரியல் எஸ்டேட் சட்டப்படி, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 40,806 திட்டங்கள் பதிவாகி உள்ளன... இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில், 17,853, குஜராத்தில், 12,250 திட்டங்களும் பதிவாகி உள்ளன. நாடு முழுவதும், ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பாக இதுவரை, 1.12 லட்சம் வழக்குகள் முடிக்கப்பட்டு உள்ளன.
இதில், உத்தரபிரதேசம், 43,188 வழக்குகளை முடித்து முதலிடத்தில் உள்ளது. 2,874 வழக்குகளை முடித்து தமிழ்நாடு 8வது இடத்தில் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கும்படியும், ஆணையங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications
