ராகுல் காந்தியை விடாமல் துரத்திய டெல்லி போலீஸ்.. பலமணிநேர காத்திருப்புக்கு பின் நோட்டீஸ்.. என்னாச்சு?
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போலீசார் சுமார் நான்கரை மணிநேரம் வரை காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல் காந்தியை விடாமல் பின்தொடர்ந்து சென்ற டெல்லி போலீசார் பலமணிநேரம் காத்திருந்து திடீரென்று நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் ராகுல் காந்தி பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தை முடங்கிய நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது அவர் பேசிய ஒரு கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். இவர் சமீபத்தில் லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியது விவாதத்தை கிளப்பியது.
இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளதாக அவர் தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. உள்நாட்டு விவகாரம் குறித்து வெளிநாட்டில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எழுந்த கூச்சல் குழப்பத்தால் தொடர்ந்து 5 வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது.

ராகுல் காந்தி பேச்சு
இந்நிலையில் தான் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் பேசியது தொடர்பாக டெல்லி போலீசார் ராகுல் காந்தியை அணுகியுள்ளனர். அதாவது ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாரத் ஜோடோ யாத்திரையை கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் துவங்கி கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் முடித்தார். காஷ்மீரில் ராகுல் காந்தி பேசும்போது, ‛‛இன்னும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறினார். காவல் துறையில் புகார் அளிக்கலாமா? என கேட்டேன். அப்போது காவல்துறையை அழைக்க நான் வெட்கப்படுகிறேன்'' என தெரிவித்துள்ளதாக ராகுல் காந்தி பேசினார்.

நோட்டீஸ் வழங்கல்
இதுதொடர்பான வீடியோ வெளியானது. இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு தான் தற்போது டெல்லி போலீசார் அவருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்த நோட்டீஸை வழங்க ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போலீஸ் அதிகாரிகள் நேற்று 3 மணிநேரம் காத்திருந்து முயன்றனர். ஆனால் ராகுல் காந்தி போலீசாரை சந்திக்கவில்லை. அதன்பிறகு வீட்டில் ஒன்றரை மணிநேரம் காத்திருப்புக்கு பிறகு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நோட்டீஸில் இருப்பது என்ன?
இந்த நோட்டீஸில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நபர்களின் விபரங்களை அளித்தால் போலீஸ் சார்பில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் எதுவும் வழங்கவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி போலீசார் வழங்கிய நோட்டீசுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
இதுபற்றி காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‛‛பிரதமர் மோடி மற்றும் அதானியின் உறவு குறித்து ராகுல் காந்தி கேட்ட கேள்விகளால் மத்திய அரசு பதற்றம் அடைந்துள்ளது. இதனால் காவல்துறைக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 45 நாட்கள் ஆகும் நிலையில் டெல்லி காவல்துறை நோட்டீஸ் வழங்கி துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை கேட்டுள்ளது'' என விமர்சனம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications