"இந்தியாவில் சுதந்திரமாக இருக்கிறேன்!" ஆனால் அடுத்த வரியே ஹசீனா சொன்ன வார்த்தை! பரபரக்கும் வங்கதேசம்
டெல்லி: மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இப்போது இந்தியாவில் வசித்து வருகிறார். தான் டெல்லியில் தங்கியுள்ளதை உறுதி செய்துள்ள ஹசீனா, தாய் நாட்டிற்குத் திரும்பும் ஆசை இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவாமி லீக் கட்சி தான் நிச்சயம் வங்கதேச எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் பல ஆண்டுகள் பிரமதராக இருந்தவர் ஷேக் ஹசீனா.. அங்கு மிகவும் வலிமையான ஒரு தலைவராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராகக் கடந்தாண்டு மாணவர் போராட்டம் வெடித்தது. இது மிகப் பெரியளவில் மாறவே ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதில் வெளிநாட்டுத் தலையீடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஷேக் ஹசீனா
இந்தியாவுக்குத் தப்பி வந்த ஷேக் ஹசீனா, அப்போது முதலே நமது நாட்டில் தான் வசித்து வருகிறார். இதற்கிடையே 78 வயதான ஷேக் ஹசீனா சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விரிவான பேட்டியை அளித்துள்ளார். அதில் அவர் பல முக்கிய விஷயங்கள் தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள வங்கதேச தேர்தலை அவாமி லீக் கட்சி புறக்கணிக்கும் என்று தெரிவித்த ஷேக் சீனா, தங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டதால் கோடிக்கணக்கான ஆதரவாளர்களும் தேர்தலைப் புறக்கணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
சட்டவிரோதமானது
மேலும், தனது கட்சி இல்லாத தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும்போது அமையும் எந்தவொரு அரசு ஆட்சியில் இருக்கும்போதும் வங்கதேசத்திற்குத் திரும்ப மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவாமி லீக் மீதான தடை என்பது சட்டவிரோதமானது. கட்சியைத் தடை செய்ய எந்தவொரு தார்மீக உரிமையும் காரணமும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் அவாமி லீக்கை ஆதரிக்கிறார்கள். எனவே , அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்" என்றார்.
கடந்த மே மாதம் அவாமி லீக் கட்சிக்கு அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணமாகக் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவாமி லீக்கை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது தொடர்பாக வங்கதேச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு ஹசீனா பதிலளிக்கவில்லை.
மோசடி
மாணவர் போராட்டத்தை ஒடுக்க மோசமான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அது குறித்த கேள்விக்கு அவர், "இதில் எனக்குத் தொடர்பு இல்லை.. இந்த விவகாரத்தில் என்னைக் குறை சொல்வது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு மோசடி. இது தொடர்பான விசாரணைகள் கங்காரு நீதிமன்றங்களால் நடத்தப்படுகின்றன.. நாங்கள்தான் குற்றவாளிகள் என முன்பே தீர்மானிக்கப்பட்டு பெயருக்கு விசாரணை நடத்துகிறார்கள். எங்கள் தரப்பை விளக்கக் கூட வாய்ப்பு தரப்படுவதில்லை.
இப்போது அரசியல் குழப்பங்கள் இருந்தாலும், வங்கதேசத்தை எதிர்காலத்தில் வழிநடத்துவதில் அவாமி லீக் கட்சிக்கு முக்கிய பங்கு இருக்கும். எனது குடும்பத்தினர் தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை" என்றார். தான் இப்போது டெல்லியில் சுதந்திரமாக வசித்து வருவதாகத் தெரிவித்த ஹசீனா, இப்போதும் கூட தாய்நாடான வங்கதேசத்திற்குத் திரும்பவே விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஹசீனா
வங்கதேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தியதில் ஹசீனாவுக்கு முக்கிய பங்கு இருந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், அவரது ஆட்சியில் தான் வங்கதேசத்தில் மனித உரிமை மீறல்களும் அதிகரித்தன. 2024இல் அவர் நான்காவது முறையாகத் தொடர்ச்சியாகத் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், அந்தத் தேர்தலின்போது முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி புறக்கணித்தது. அப்படியொரு சூழலில் தான் தேர்தல் அங்கு நடத்தப்பட்டது.
இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு ஹசீனாவுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. முதலில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வெடித்த அந்தப் போராட்டம் பிறகு, ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தித் தொடர்ந்தது. அது ஒரு கட்டத்தில் கலவரமாக மாறவே ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications