Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜார்க்கண்டின் 'ஆலமரம்' சாய்ந்தது! காடே வீடாக வாழ்வு! சிபு சோரனின் புரட்சி சரித்திரம் பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜார்க்கண்ட் மக்களின் 'திஷோம் குரு' (வழிகாட்டும் ஆசான்) எனப் போற்றப்படும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனரும், பழங்குடியினரின் அசைக்க முடியாத தலைவருமான சிபு சோரன் (Shibu Soren) , ஆகஸ்ட் 4ம் தேதியான இன்று டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் காலமானார். 81 வயதான இவரின் மறைவு, அரசியல் தலைவரின் மறைவு மட்டுமல்ல, ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

பிறப்பும், புரட்சியின் விதையும்!

1944 , ஜனவரி 11ம் தேதி பிறந்த ஷிபு சோரன், "தர்த்தி அபா" (பூமியின் தந்தை) பிர்சா முண்டா எழுப்பிய புரட்சிக் குரலுக்குப் புதிய பரிமாணத்தை அளித்தவர். பிர்சா முண்டாவின் போராட்டம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இருந்தபோது, சிபு சோரனின் எதிர்ப்பு நாட்டின் உள் கட்டமைப்பிற்கு எதிராக இருந்தது. அது, பழங்குடியின சமூகம் சுரண்டல், பணக்காரர்களின் அடக்குமுறை மற்றும் கந்துவட்டி ஆகியவற்றால் அல்லல்பட்டிருந்த காலம். "திஷோம் குரு" ஷிபு சோரன் தனது போராட்டத்தைத் தொடங்கியபோது, ஜார்க்கண்டின் காடுகளை அவர் வீடு போலவே கருதினார். காவல்துறையின் துப்பாக்கி குண்டுகள் அவரைத் துரத்த, பல ஆண்டுகள் காடுகளில் மறைந்திருந்து, இரவுகளை அங்கேயே கழித்தார்.

Shibu Soren Jharkhand

ஒரு மகனின் எழுச்சி!

1970களில், சிபு சோரன் ஜார்க்கண்டின் சமூக-அரசியல் வரைபடத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். 30 வயது நிரம்பிய சிபு சோரன், பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியால் கொதித்தெழுந்து ஒரு புரட்சிக்காரராக மாறினார். அதற்கு ஒரு காரணம் இருந்தது. சிபு சோரனின் தந்தை சோபரன் சோரன், ஒரு பள்ளி ஆசிரியராகவும், காந்தியவாதியாகவும் இருந்தார். நியாயத்தைப் பேசும் சோபரன், கந்து வட்டிக்காரர்களுக்குக் கண்ணில் உறுத்தலாக இருந்தார். அந்த நேரத்தில் ஜார்க்கண்டில் கந்து வட்டிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பழங்குடியின மக்களை கடன் வலையில் சிக்கவைத்து, பல மடங்கு பணத்தை வசூலித்தனர். பல சமயங்களில், வட்டிக்கு ஈடாக அவர்களது நிலங்களையும் அபகரித்துக் கொண்டனர்.

கடன் வாங்கி விவசாயம் செய்த பழங்குடியினர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை, ஏனெனில் கந்து வட்டிக்காரர்கள் அவர்களது பங்கையும் அபகரித்தனர். சோபரன் மாஞ்சி இதை எதிர்த்தார். இந்த காரணத்தினால், ஷிபு சோரன் பிறந்த ராம்பூரில் உள்ள கந்து வட்டிக்காரர்களுக்கு அவர் பிடிக்கவில்லை. சிபு சோரன் அப்போது படித்துக் கொண்டிருந்தார். நவம்பர் 27, 1957 அன்று காலை, தனது தந்தை கொலை செய்யப்பட்டதாக ஷிபு சோரனுக்குத் தெரியவந்தது.

Shibu Soren Jharkhand

இந்தச் சம்பவம் சிபு சோரனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிபு சோரன் தனது படிப்பை விட்டுவிட்டார். இந்த அடக்குமுறைக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினார். பழங்குடியின இளைஞர்களை ஒன்றிணைத்து ஒரு குழுவை உருவாக்கினார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1970 இல், சிபு இந்தப் போராட்டத்தின் கட்டளையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார்.

இந்த காலகட்டத்தில்தான் அவருக்கு 'திஷோம் குரு' என்ற பட்டம் கிடைத்தது. பின்னர், சமூக ஆர்வலர்கள் பினோத் பிஹாரி மஹ்தோ மற்றும் ஏ.கே. ராய் ஆகியோரும் சுரண்டலுக்கு எதிரான இந்தப் பிரச்சாரத்தில் இணைந்தனர். மெதுவாக, அவர்களுக்குத் தங்கள் சொந்த அரசியல் கட்சியின் தேவை ஏற்பட்டது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பிறப்பு!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) உருவானதைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் அனுஜ் குமார் சின்ஹா தனது "அன்சங் ஹீரோஸ் ஆஃப் ஜார்க்கண்ட்" (Unsung Heroes of Jharkhand) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 1972 பிப்ரவரி 4 அன்று, ஷிபு சோரன் மற்றும் தோழர் ஏ.கே. ராய், பினோத் பிஹாரி மஹ்தோவின் வீட்டில் கூடினர். இக்கூட்டத்தில், ஜார்க்கண்டில் மாற்றத்தைக் கொண்டுவரவும், அரசியல் நோக்கங்களை அடையவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உருவாக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து ஒரு சுதந்திர நாடாக மாறியது, இதில் வங்கதேச முக்தி பாஹினி முக்கியப் பங்காற்றியது. இந்த 'முக்தி' (விடுதலை) என்ற சொல்லால் ஈர்க்கப்பட்டு, தனி ஜார்க்கண்ட் என்ற கனவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவப்பட்டது.

Shibu Soren Jharkhand

வில்லும் அம்பும்!

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிபு சோரன் "தான்கட்னி" (நெல் அறுவடை) இயக்கத்தைத் தொடங்கினார். பழங்குடியின இளைஞர்கள், கந்து வட்டிக்காரர்களின் நிலங்களில் நிற்கும் நெற்பயிர்களை அறுவடை செய்வார்கள். அப்போது, பழங்குடியின இளைஞர்கள் வில் அம்பு ஏந்தி அவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த வில்லும் அம்பும்தான் பின்னர் ஷிபு சோரனின் அரசியல் அடையாளமாக மாறியது.

"தான்கட்னி" இயக்கம் சிபு சோரனுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் ஷிபு சோரனை தங்கள் கதாநாயகனாகப் பார்த்தனர். அவர் தங்களை கந்துவட்டி, பணக்காரர்களின் பிடி, மற்றும் சுரண்டலில் இருந்து விடுவிக்க முடியும் என்று நம்பினர்.

சிபு சோரன் ராம்பூர், கிரிதி, பொகாரோ மற்றும் ஹசாரிபாக் போன்ற பகுதிகளில் கந்து வட்டிக்காரர்களுக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடங்கினார். அப்போது, நிலப்பிரபுக்களும், கந்து வட்டிக்காரர்களும் சூழ்ச்சி மற்றும் மோசடி மூலம் பழங்குடியினரின் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர்.

மான்தரின் தாளத்தில் தான்கட்னி!

சிபு சோரன் தனது தோழர்களுடன் துண்டி, பல்மா, தோப்ச்சான்ச்சி, டும்ரி, பெர்மோ, பிர் தாண்டில் போராட்டங்களைத் தொடங்கினார். அக்டோபர் மாதத்தில், பழங்குடியினப் பெண்கள் அரிவாளுடன் வந்து நிலப்பிரபுக்களின் வயல்களில் இருந்து பயிர்களை அறுவடை செய்து எடுத்துச் செல்வார்கள். முரசு அடித்து அறிவிப்பு செய்யப்படும். பழங்குடியின இளைஞர்கள் வில் அம்பு ஏந்தி வயல்களைக் காத்து நிற்பார்கள், பெண்கள் பயிர்களை அறுவடை செய்வார்கள்.

இது அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. மோதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. சிபு சோரன் பராஸ்நாத்தின் அடர்ந்த காடுகளுக்குள் மறைந்து அங்கிருந்து போராட்டத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தின் போது, குருஜி தனது தோழர்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதித்தார். "இந்த சண்டை நிலங்களுக்கானது, அது நிலங்களில் மட்டுமே சண்டையிடப்படும்" என்று அவர் தீர்மானித்தார். எனவே, இந்த இயக்கம் முழுவதும், கந்து வட்டிக்காரர்கள் மற்றும் உயர் வகுப்பினரின் பெண்கள் ஒருபோதும் தவறாக நடத்தப்படவில்லை, அவர்களின் நிலங்களைத் தவிர வேறு எந்தச் சொத்துக்கும் சேதம் விளைவிக்கப்படவில்லை.

Shibu Soren Jharkhand

குருஜி சரணடைந்தபோது...

ஜூன் 25, 1975 அன்று, இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். அவசரநிலையின் அதிகாரத்தைப் பெற்ற அரசு, சிபு சோரனைக் கைது செய்ய உத்தரவிட்டது. ஆனால் சிபு சோரன் தலைமறைவாக இருந்தார். அப்போது தன்பாத்தின் துணை ஆட்சியராக இருந்த கே.பி. சக்சேனா, சிபு சோரனைப் புரிந்துகொண்டார். சட்டத்தின் தீவிரத்தையும் அரசியல் தந்திரங்களையும் சிபு சோரனுக்கு விளக்கி, சரணடையுமாறு சம்மதிக்க வைத்தார்.

சத் பாடலால் மனம் மாறிய சிபு சோரன்!

சிபு சோரன் 1976 இல் சரணடைந்தார். அவர் தன்பாத் சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு நடந்த ஒரு சம்பவம், அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஒரு போராளியாக இருந்த சிபு சோரன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டவர் என்பதைக் நிரூபித்தது. சிபு சோரன் சிறையில் இருந்தார். அது அக்டோபர்-நவம்பர் மாதம். இந்த நேரத்தில், பீகார்-ஜார்க்கண்டில் சத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிறையில் ஒரு பெண் கைதி சோகமான குரலில் சத் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.

இந்தச் சம்பவத்தை சிபு சோரனிடமிருந்து கேட்ட மூத்த பத்திரிகையாளர் அனுஜ் குமார் சின்ஹா, "சிறையில் உள்ள பெண் கைதியின் பாடலைக் கேட்ட ஷிபு சோரனுக்கு எதுவும் புரியவில்லை. இதுபற்றி ஜார்க்கண்ட் இயக்கத்தின் மற்றொரு ஊழியரும் சிறையில் இருந்தவருமான ஜாக்டு பண்டிட்டிடம் கேட்டார். ஜாக்டு அவரிடம், 'அந்தப் பெண் ஒவ்வொரு முறையும் சத் கொண்டாடுவார், ஆனால் இந்த முறை ஒரு குற்றத்திற்காக சிறையில் இருப்பதால், அவரால் சத் கொண்டாட முடியவில்லை, அதனால் மிகுந்த வேதனையுடன் சத் பாடல்களைப் பாடுகிறார்' என்று கூறினார். அப்போது, சிபு சோரன் ஒரு பழங்குடித் தலைவராகப் புகழ்பெற்றிருந்தார். ஆனாலும், பழங்குடியினர் அல்லாத ஒரு பெண்ணின் வேதனையைக் கேட்டும் அவர் மிகவும் வருந்தினார். சிறையிலேயே அந்தப் பெண்ணுக்கு சத் விரத ஏற்பாடுகளைச் செய்தார்."

வெளியே தனது தலைமைத்துவத் திறமையைக் காட்டிய சிபு சோரன், சிறையிலும் தனது தலைமைத்துவ குணங்களை வெளிப்படுத்தினார். "ஒரே ஒரு இரவு உணவு சாப்பிட வேண்டாம், அந்தப் பணம் சத் பூஜைக்கான பொருட்களை வாங்கப் பயன்படுத்தப்படும்" என்று அனைத்து கைதிகளுக்கும் சிபு சோரன் வேண்டுகோள் விடுத்தார். அது நடந்தது. அனைத்து கைதிகளும் ஒரு வேளை உணவைத் தவிர்த்தனர், அந்தப் பெண் பாரம்பரிய நம்பிக்கையுடன் சத் பூஜை செய்தார்.

குடிப் பழக்கத்தை விட மறுத்த மாமாவுடன் சண்டை!

அந்த பிராந்திய பழங்குடியினரின் வாழ்க்கை முறைப்படி, மது அருந்துவது இயல்பானதாக இருந்தது. மது மற்றும் 'ஹண்டியா' (உள்ளூர் பானம்) பயன்பாடு அங்கு சாதாரணம். சிபு சோரன் பழங்குடியின சமூகத்தின் தலைவராக இருந்தாலும், அவர் எப்போதும் போதைப்பொருட்களிலிருந்து விலகி இருந்தார். மதுவிலக்கு மீதான அவரது பிடிவாதம் காரணமாக, ஒருமுறை தன் மாமாவுடன் கோபப்பட்டு அவரைத் தாக்கியுள்ளார்.

Shibu Soren Jharkhand

நீதிமன்றம் அமைத்து பஞ்சாயத்து நடத்திய ஷிபு சோரன்!

பெண்களின் மரியாதை குறித்து ஷிபு சோரன் மிகவும் விழிப்புடன் இருந்தார், பெண்களை இழிவு செய்தால் அதை அவர் பொறுத்துக் கொள்ளவில்லை. ஒருமுறை சிபு சோரன் டும்காவில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு தன்பாத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சிபு மிகவும் அவசரமாக இருந்தார். வழியில் சாப்பிடவோ, டீ குடிக்கவோ அவர் நிற்கவில்லை. ஆனால் திடீரென அவரது கார் நடுவழியில் நின்றது. சிபு சோரன் ஒரு கிராமத்தை அடைந்தார். அவருக்கு ஒரு கட்டில் போடப்பட்டது. கூட இருந்தவர்களுக்கே ஏன் என்று தெரியவில்லை. பிறகுதான் தெரிய வந்தது அங்கு ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட மானபங்க வழக்கு விசாரிக்கப்பட்டது. அங்கேயே நீதிமன்றம் அமைத்து தீர்ப்பு வழங்கிய பின்னரே அங்கிருந்து கிளம்பினார் சிபு சோரன். இருப்பினும், இந்த பஞ்சாயத்து காரணமாக, தன்பாத் செல்ல அவருக்கு 5-6 மணி நேரம் தாமதமானது.

இரவில் சிபு சோரனைச் சூழ்ந்த போலீஸ்!

அது சிபு சோரனின் போராட்டக் காலம். அவர் பல்மாவில் உள்ள காட்டில் இருந்தார். இரவு நேரம், அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென இந்த அமைதியில் காட்டில் ஒரு நாய் குரைக்கத் தொடங்கியது. சிபு உடனடியாக எச்சரிக்கையானார். அவரது வீடு ஒரு மலையில் இருந்தது, அங்கிருந்து குதித்து அவர் முன்னே சென்றபோது, ​​முழு மலையையும் போலீசார் சூழ்ந்திருப்பதைக் கண்டார். சிபு சோரன் உடனடியாக முரசு அடித்தார். இது அருகில் உள்ள பழங்குடியினருக்கு ஒரு சிக்னல். உடனடியாக ஒரு பழங்குடியினக் குழு அங்கு வந்து சேர்ந்தது. இவர்கள் சிபு சோரனைப் பாதுகாத்தனர். ஏராளமான பழங்குடியினர்கள் வந்ததால், காவல்துறையினர் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Shibu Soren Jharkhand

அரசியல் பயணம்

ஜார்க்கண்டின் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்த சிபு சோரன், தனது முதல் தேர்தலில் 1980 இல் போட்டியிட்டார். ஆனால் அவர் இந்த அரசியல் போரில் தோற்றார். இருப்பினும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 1991 இல், அவரது கட்சி பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது, அதில் JMM சிறப்பாகச் செயல்பட்டது. சிபு சோரனின் அரசியல் பாரம்பரியம் அவரது மகன் ஹேமந்த் சோரனால் முன்னெடுக்கப்படுகிறது. ஹேமந்த் சோரன்தான் தற்போது ஜார்கண்ட் முதல்வராகும். தற்போது, JMM ஜார்க்கண்டில் மிகப்பெரிய கட்சியாகும். மக்களுக்காக போராடிய சிபு சோரனை, மக்கள் கைவிடவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+