"மதவெறியை மண்டியிட செய்த வீரப்பெண் முஸ்கான்" சு.வெங்கடேசன் ஆவேச பேச்சு! கோஷமிட்ட பாஜக எம்.பி.க்கள்
டெல்லி: மதவெறியை மண்டியிட செய்த வீரப்பெண் முஸ்கான் என மதுரை எம்பி சு வெங்கடேசன் ஆவேசமாக பேசினார். அப்போது பாஜக எம்பிக்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
Recommended Video
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் முற்றுகிறது. மண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லீம் மாணவியை முற்றுகையிட்ட இந்துத்துவா மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அத்தனை மாணவர்களுக்குள் மத்தியில் தைரியமாக வீறு நடை போட்ட முஸ்லீம் பெண் முஸ்கானுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இதுகுறித்து லோக்சபாவில் சு வெங்கடேசன் பேசுகையில், பணமதிப்பிழப்பு தொடர்பாக பிரதமரை கிண்டல் செய்து நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறி ஒன்றிய இணையமைச்சர் அவரே ஒரு புகாரை கேட்டு வாங்கி அந்த தொலைக்காட் சிசேனலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் இன்றைய தினம் கர்நாடகாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஹிஜாப் அணிவதை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் மாணவ சமூகத்தையே கூறு போட்டு கொண்டிருக்கிறது.

சமூகமயம்
தன் வயதை ஒத்த மாணவர்களோடு கலந்துரையாடி சமூகமயமாக வேண்டிய மாணவ சமூகத்தினுடைய முன்னுரிமையை குலைக்கிறது. சிறார்கள் தலையிலே கிரீடம் அணிவதும் மாணவிகள் ஹிஜாப் அணிவதும் இவர்களுடைய உத்தரவின்பேரில்தான் நடக்க வேண்டுமா? பள்ளிக் குழந்தைகள் என்ன நாடகம் போட வேண்டும் என்பதும் மாணவ சமூகம் என்ன ஆடை அணிய வேண்டும் என உத்தரவிட இவர்கள் யார் என்ற கேள்வியை இந்த அவையில் நான் எழுப்ப விரும்புகிறேன்.

மதமாற்றம்
தஞ்சை பள்ளி மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் காரணமாக இருக்குமோ மர்மம் காரணமாக இருக்குமோ என சொல்லி அவசர அவசரமாக தேசிய குழந்தைகள் ஆணையம் தமிழகத்திற்கு விரைகிறது. ஆனால் கர்நாடகாவிற்கு எந்த ஆணையமும் விரையவில்லையே ஏன் என கேட்க விரும்புகிறேன்.

வீரப்பெண் முஸ்கான்
சிறார்கள் நடத்திய நாடகத்தின் மீது ஒன்றிய அமைச்சகம் உடனடியாக தலையீடு செய்கிறது. ஆனால் கர்நாடகா பிரச்சினையே பேச இந்த அவையில் நேரம் ஒதுக்க மறுக்கிறீர்களே அது ஏன் என்ற கேள்வியை கேட்க விரும்புகிறோம். துண்டு துணியை வைத்து எங்களது கல்வி உரிமையை பறிக்க விடமாட்டோம் என முழங்கியிருக்கிறார் வீரப்பெண் முஸ்கான்.

மண்டியிடச் செய்யும் வார்த்தை
சக மாணவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டாம். அவர்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்தால் போதும் என சொல்லியிருக்கிறார் முஸ்கான். இந்த வார்த்தை மத வெறியை மண்டியிடச் செய்யும் வார்த்தை. இந்த வார்த்தை மாணவியின் வார்த்தை அல்ல, ராமனின் வார்த்தை, நபிகளின் வார்த்தை, ஏசுபிரானின் வார்த்தை, மதவெறியை மண்டியிடச் செய்ய மனிதன் கற்றுக் கொடுத்த மகத்தான் வார்த்தை. இந்த அவை முழுக்க இந்த வார்த்தைகள் எதிரொலிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். அப்போது நீ உட்காருப்பா என பாஜக எம்பி ஒருவர் சொல்ல அதற்கு சு வெங்கடேசன், நீ உட்காருப்பா முதல்ல என்றார். அப்போது பாஜகவினர் கோஷமிட்டனர்.


Click it and Unblock the Notifications
