வீட்டுக்கு கூட போகல.. மருத்துவமனையில் இருந்து நேரடியாக வாக்களிக்க வந்த நாராயண மூர்த்தி! அடடே செம
டெல்லி: இன்று இரண்டாம்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நாராயண மூர்த்தி நேரடியாக வாக்கச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் முதற்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்குக் கடந்த 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

இந்தச் சூழலில் இன்று 2வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாராயண மூர்த்தி: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பலரும் காலை முதலே வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, அவரது மனைவியும் ராஜ்யசபா உறுப்பினருமான சுதா மூர்த்தி பெங்களூரில் இன்று தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றினர்.
இது தொடர்பாக நாராயண மூர்த்தி கூறுகையில், "ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாம் இந்த வாக்களிக்கும் உரிமையைப் பெறுகிறோம். இந்த உரிமையை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். இந்த வாய்ப்பை யாரும் தவறவிடக்கூடாது" என்று தெரிவித்தார். நாராயண மூர்த்திக்கு உடல்நிலை பாதிப்பு இருந்த போதிலும் அவர் காலையிலேயே வாக்களிக்க வந்துள்ளதாக அவரது மனைவி சுதா மூர்த்தி தெரிவித்தார்.
மருத்துவமனை: இது குறித்து சுதா மூர்த்தி கூறுகையில், "நாராயண மூர்த்தி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டிஸ்சார்ஜ் செய்த உடன் அவர் வாக்களிக்க வந்துள்ளார். இதன் பின்னரே அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறோம்" என்று அவர் தெரிவித்தார். தேர்தல் வார இறுதியில் வந்தால் லாங் வீக் எண்ட் என்று நினைத்து சிலர் பொறுப்பு இல்லாமல் ஊருக்குச் செல்லும் நிலையில், உடல்நல பாதிப்பையும் தாண்டி நாராயண மூர்த்தி வாக்களிக்க வந்துள்ளார்.
அவர் வரிசையில் நின்று வாக்களிக்கும் போட்டோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. காலை நேரத்தில் நாராயண மூர்த்தி இப்படி பொறுப்புடன் வாக்களித்துள்ளது இளைஞர்கள் பலருக்கும் உத்வேகத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது. சுதா மூர்த்தி மேலும் கூறுகையில், "நான் வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது. இருப்பினும், அதற்கு முன்பு வாக்களிக்க வேண்டும் என்பதாலேயே இங்கு வந்தோம்.
வாக்களிக்க வேண்டும்: வெறுமன அது சரி இல்லை இது சரி இல்லை என்று பேசுவது மட்டும் போதாது. தேர்தலில் வாக்களித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.. எங்களைப் போன்ற மூத்தவர்கள் கூட காலையில் வரிசையில் நின்று வாக்களிக்கிறோம். இளைஞர்களும் வந்து வாக்களிக்க வேண்டும்.
பெங்களூர் போன்ற அதிகம் படித்த மக்கள் வசிக்கும் நகர்ப் பகுதிகளில் தான் வாக்குப்பதிவு குறைவாக இருக்கிறது. இந்த நிலையை நீங்கள் மாற்ற வேண்டும். வாக்காளர்களாகிய நீங்கள் உங்கள் உரிமையைப் பயன்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
டிராவிட்: தேபோல இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டும் காலையிலேயே தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் சுமுகமாக நடக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... தயவு செய்து பொதுமக்கள் வந்து வாக்களியுங்கள். பெங்களூரில் அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாக வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும்" என்றார்












Click it and Unblock the Notifications