உடல்நிலை சரியானதும் இந்தியா வருகை தரும் சுனிதா வில்லியம்ஸ்? குஜராத்தில் இருக்கும் உறவினர் சொன்ன சேதி
டெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விரைவில் இந்தியா வர இருப்பதாக குஜராத் மாநிலத்தில் வசிக்கும் அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கு ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14 ஆம் தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சுமார் 9 மாதங்களாக அவர்கள் விண்வெளியில் தங்கினர். பல்வேறு இடையூறுகள் மற்றும் தாமதங்களுக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் நேற்று காலை இந்திய நேரப்படி 10:35 மணிக்கு தன்னுடைய பூமியை நோக்கிய பயணத்தை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் தொடங்கினர்.
இன்று அதிகாலை 3:27 மணிக்கு அவர்கள் பயணித்த விண்கலம் ஃப்ளோரிடாவில் கடற்பரப்பில் தரையிறங்கியது. கடலில் விழுந்த டிராகன் கேப்சூலை படகு மூலம் மீட்டு அதிலிருந்த விண்வெளி வீரர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்துச் சென்றது ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா விஞ்ஞானிகள் குழு.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 9 மாதங்கள் 13 நாட்கள் தங்கியிருந்தார். இதனால் அவர் உட்பட 4 வீரர்களுக்கும் பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும். விண்வெளியில் தங்கியிருந்ததால் குறிப்பாக அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது. பூமிக்குத் திரும்பிய 4 பேரும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு 45 நாட்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படும். சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
286 நாள்கள் விண்வெளியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சுனிதா வில்லியம்ஸ், பூமிக்கு திரும்பியதும் அனைவரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். சுனிதா வில்லியம்ஸின் பூர்வீக ஊரான குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

சுனிதா வில்லியம்ஸின் தந்தை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெயர் தீபக் பாண்டியா. அவருக்கு சொந்த ஊர் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமம். நரம்பியல் மருத்துவரான சுனிதாவின் தந்தை 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அமெரிக்கரான உர்சுலின் போனியை மணந்தார். இந்த தம்பதியினருக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி, 1965ம் ஆண்டு சுனிதா பிறந்தார்.
கடந்த காலத்தில் விண்வெளிப் பயணங்களை வெற்றிகரமாக முடித்த பிறகு வில்லியம்ஸ், தனது தந்தையின் சொந்த கிராமமான ஜூலாசனுக்கு மூன்று முறை பயணம் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது 9 மாதங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் வசித்துவிட்டு பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் தமது பூர்வீக கிராமத்துக்கு வருவார் என அவரது உறவினர் கூறியுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸின் உறவினர் 59 வயதான ஃபால்குனி பாண்டியா பேசுகையில், "சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினரை டிராகன் விண்கலம் பூமிக்கு அழைத்து வந்தது நம்பமுடியாததாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் விரைவில் தனது சொந்த நாடான இந்தியாவுக்கு வர இருக்கிறார். அவரது குடும்பத்தினர் விடுமுறையில் இங்கு வர திட்டமிட்டுள்ளனர். குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிடப் போகிறோம் என்று கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 19 அன்று தனது 59வது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸுக்கு காஜு கட்லியை அனுப்பினோம். அவர் மகிழ்ச்சியுடன் அதை சாப்பிட்டார். அதைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார்." எனத் தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸின் மற்றொரு உறவினர் தினேஷ் ராவல் கூறுகையில், இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பாதுகாப்பான தரையிறக்கத்திற்காக இரவு முழுவதும் பிரார்த்தனை செய்தோம். கடந்த ஒன்பது மாதங்கள் எங்களுக்கு எளிதானவை அல்ல. நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். சுனிதா மிகவும் துணிச்சலானவர்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications