'ரேஷன் கடைகளில் அடுத்த இரண்டு வருஷத்துக்கு'.. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
டெல்லி: 1.89 கோடி ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் சர்க்கரை வழங்கும் திட்டம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதில் நாடு முழுவதும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளர் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் சர்க்கரை வழங்கும் திட்டத்தை 2026 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருகிறது.

இதன் மூலம் மேற்படி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோ சர்க்கரை என்ற விகிதத்தில் கிலோவுக்கு ரூ.18.50 மானியமாக மத்திய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கும். இந்த திட்டத்தின் மூலம் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 1.89 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைப்போல ஆடைகளுக்கான ஏற்றுமதி ஊக்கத்தொகை திட்டத்தை 2026-ம் ஆண்டு மார்ச் வரை தொடரவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் நீண்ட கால வர்த்தக திட்டமிடலுக்கு இன்றியமையாத ஒரு நிலையான கொள்கையை இந்த நடவடிக்கை வழங்கும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டம் என்றால் என்ன: அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு உணவு மற்றும் பிற பொருட்கள் மானிய விலையில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.. அதுவும் எப்படி என்றால், பொது விநியோகத்திட்டமான ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி, கோதுமை கிலோ ஒன்றுக்கு ரூ.3க்கும், அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.2க்கும் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவின் கீழ் வரும் குடும்பங்கள் ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ சர்க்கரையை கிலோ ரூ.18.50 என்ற விலையில் வாங்கலாம்.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் விதவைகள், தீராத நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், குறைந்தபட்ச வருமானம் இல்லாத முதியோர், மலைவாழ் குடும்பங்கள் இந்தியா முழுவதும் பயன்பெறுகின்றன. இந்த திட்டத்திற்கான பயனாளிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தேர்வு செய்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை 18,64,600 கார்டுகள் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் இருப்பதாக அரசின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரையை உள்ளடக்கிய அனைத்து பொருட்களும் பெறும் கார்டுகளாக தமிழகத்தில் 76,99,940 கார்டுகள் இருப்பதாகவும், அரிசி உட்பட அனைத்து பொருட்களும் பெறும் கார்டுகளாக 90,08,842 கார்டுகளும், அரிசியை தவிர சர்க்கரை உட்பட அனைத்து பொருட்களும் வாங்கும் கார்டுகளாக 10,01,605 கார்டுகளும், எந்த ஒரு பொருளும் வாங்காத, ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்தும் கார்டுகளாக 41,106 கார்டுகளும் இருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.. அனேகமாகபுதிய கார்டுகளுடன் சேர்ந்து சுமார் 2 கோடி கார்டுகள் தமிழகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications