பாஜகவுக்கு “டபுள் ஷாக்”! லேசாக குறைந்த மோடி அலை.. ஏறி கிளம்பும் ராகுல் காந்தி - கருத்துக்கணிப்பு
டெல்லி: இந்தியா டுடே வெளியிட்ட 2024 தேர்தல் கருத்துக்கணிப்பில் மோடிக்கு இருக்கும் ஆதரவு சரிந்து இருப்பதும், ராகுல் காந்தியின் ஆதரவு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதேபோல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வென்று 2 வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

மத்திய பாஜக அரசின் பதவி காலம் 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், தேர்தல் தேதி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை அமைத்து உள்ளன.
மறுபக்கம் பாஜகவும் தன்னுடைய ஆதரவு கட்சிகளை அழைத்து கூட்டத்தை கூட்டியது. இந்த நிலையில் ஆங்கில ஊடகமான இந்தியா டுடே 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பை வெளியிட்டு உள்ளது. சி ஓட்டருடன் இணைந்து இந்தியா டுடே மூட் ஆஃப் நேஷன் என்ற பெயரில் அவ்வப்போது கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது.
ஆகஸ்டு மாதம் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் 63 சதவீதம் பேர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக கூறி உள்ளார்கள். 13 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடு சுமாராக இருந்ததாகவும், 22 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு மோசமாக இருந்தது எனவும் கூறி இருக்கிறார்.
கடந்த முறை இந்தியா டுடே நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் 72 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடு திருப்தியளிப்பதாக கூறிய நிலையில், தற்போது அந்த சதவீதம் சரிந்துள்ளது. 44 சதவீதம் பேர் பிரதமர் நரேந்திர மோடிக்காக வாக்களிக்க உள்ளதாகவும், 22 சதவீதத்தினர் வளர்ச்சிக்காகவும், 14 சதவீதம் பேர் இந்தித்துவ கொள்கைக்காக வாக்களிப்போம் எனவும் கூறி உள்ளார்கள்.
52 சதவீதம் பேர் நரேந்திர மோடியே 3 வது முறையாக மீண்டும் பிரதமராக வேண்டும் என கருத்து தெரிவித்து உள்ளார்கள். இருந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் மோடி சாதகமாக இருப்பதாக தெரிந்தாலும் கடந்த மாதத்தை விட ராகுல் காந்திக்கு ஆதரவு அதிகரித்து இருப்பதும் மோடிக்கு ஆதரவு குறைந்து இருப்பதையும் கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
கடந்த ஜனவரி 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிக்கு 53% ஆதரவும், ராகுல் காந்திக்கு 7 சதவீத ஆதரவும் இருந்தது. கடந்த ஆகஸ்டு 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிக்கு 53% ஆதரவும், ராகுல் காந்திக்கு 9 சதவீத ஆதரவும் இருந்தது.
கடந்த ஜனவரி 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிக்கு 53% ஆதரவும், ராகுல் காந்திக்கு 14 சதவீத ஆதரவும் இருந்தது. கடந்த ஆகஸ்டு 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிக்கு 52% ஆதரவு குறைந்து உள்ளதுடன், ராகுல் காந்திக்கான ஆதரவு 16 சதவீதமாக கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications