டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீனவர்கள் சுருக்குமடி வலையை 2 நாட்கள் பயன்படுத்த அனுமதி- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மீனவர்கள் சுருக்குமடி வலைகளை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்தது. சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் வளம், மீன்களின் இனப்பெருக்கம், பவளப் பாறைகள் பாதிக்கப்படுகிறது என்பது அரசு தெரிவித்துள்ள காரணம். தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போதும் சுருக்குமடி வலைகள் மீதான தடை விவகாரம் முக்கியமான ஒன்றாக இருந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீனவர்கள் போராட்டங்களையும் நடத்தினர்.

Supreme Court allows to purse seine fishing in Tamilnadu

தமிழ்நாடு அரசின் இந்த கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2014-ம் ஆண்டு மத்திய அரசானது கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிக்க அனுமதித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்தது. அத்துடன் தமிழ்நாடு அரசின் சுருக்குமடி வலை மூலமான மீன்பிடிப்பு தடை செல்லும் எனவும் தீர்ப்பளித்தது.

Supreme Court allows to purse seine fishing in Tamilnadu

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் ஞானவேல் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி போபண்ணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சஞ்சய் ஹெக்டே ஆஜராகி வாதிட்டனர். மனுதாரர் சார்பில் வாதிடுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சுருக்குமடி மீன்பிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டது சட்டவிரோதம். கடலில் 12 கடல்மைல் தொலைவைத் தாண்டி மீன்பிடிக்க அனுமதி இருக்கிறது. ஆனால் அங்கே மீன்பிடித்தாலும் கூட அரசு தரப்பு நடவடிக்கை எடுக்கிறது; சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்கிறது. ஆகையால்தான் 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்; சுருக்குமடி மீன்பிடித்தலுக்கான தடையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 18-ந் தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் 12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Supreme Court allowed to use of purse seine nets for fishing in the State of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X