சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்.. யார் இவர்?
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் 51-வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்பார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக டி ஒய் சந்திரசூட் உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பரிந்துரைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சஞ்சீவ் கண்ணா வரும் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று அப்பதவியில் 2025ம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார் எனக் கூறப்படுகிறது. 51 வது நீதிபதியாக பொறுப்பேற்க்க இருக்கும் சஞ்சீவ் கண்ணா கிட்டதட்ட 6 மாதங்கள் தலைமை நீதிபதி பொறுப்பை வகிப்பார்.
யார் இந்த சஞ்சீவ் கண்ணா?: கடந்த 1960 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்னா, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவரது தந்தை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரது தாயார் சரோஜ் கண்ணா, இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணியாற்றினார். 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.
வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றினார். கடந்த 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் அவர் ஆஜராகியிருக்கிறார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005 ஆம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் சஞ்சீவ் கண்ணா. இதற்கு முன்பாக ஒரு சில நீதிபதிகளே இப்படி பொறுப்பை வகித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications