அதானி- ஹிண்டன்பர்க் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய சீராய்வு மனு- உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்!
டெல்லி: அதானி குழுமத்தின் பங்கு சந்தை முறைகேடுகள் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவை இல்லை என்பது உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் பிறப்பித்த உத்தரவு. இந்த உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமானது ஒரு அறிக்கையை வெளியிட்டது. 106 பக்கங்களைக் கொண்ட ஹிண்டன்பர்க் அறிக்கையில், கார்ப்பரேட் உலகிலேயே மிகப் பெரிய மோசடிகளை செய்துள்ளது அதானி குழுமம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியது. பங்குச் சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடிகளையும் ஹிண்டன்பர்க் அறிக்கை விவரித்தது.

ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையை அதானி குழுமம் திட்டவட்டமாக நிராகரித்தது. இந்த சர்ச்சையால் பங்குச் சந்தைகளில் அதானி குழுமம் பெரும் பின்னடைவை சந்தித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அதானி- ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவும் அந்த மனுக்களில் வலியுறுத்தபட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவை இல்லை எனவும் இந்த விவகாரத்தை செபி அமைப்பானது 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் என கடந்த ஜனவரி மாதம் அதிரடித் தீர்ப்பளித்தது. அத்துடன் செபியின் குறிப்பிட்ட வரம்புக்குள்தான் தலையிடவும் முடியும்; ஏற்கனவே செபி அமைப்பானது 22 பிரச்சனைகளில் 20-ன் மீதான விசாரணையை முடித்தும்விட்டது. ஆகையால்தான் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையே தேவை இல்லை எனவும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மீது நாடு முழுவதும் விவாதங்களும் நடைபெற்றன.
இதனிடையே அதானி- ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை திங்கள்கிழமையன்று விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் எந்த தவறும் இல்லை. ஆகையால் சீராய்வு மனுக்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications