ராஜீவ் கொலை வழக்கு:30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதே தீர்வு-உச்சநீதிமன்றம்
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுதலை செய்வது ஒன்றுதான் தீர்வு என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Recommended Video
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும் பலர் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது பேரறிவாளன்,நளினி உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

கிடப்பில் போட்ட ஆளுநர்
ஆயுள் தண்டனைகளை மாநில அரசு தமக்கு உள்ள 161-வது அரசியல் சாசனப் பிரிவு அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அறிவுறுத்தியது. இதனடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதனை ஜனாதிபதிக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார்.

பேரறிவாளனுக்கு ஜாமீன்
இதனிடையே ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு மிக மிக கடுமையான அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது. ஒருகட்டத்தில் பேரறிவாளனை ஜாமீனில் விடுதலை செய்யவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

ஆளுநர் மீது பாய்ச்சல்
இந்த நிலையில் இன்று நீதிபதி நாகேஷ்வரராவ் தலைமையிலான பெஞ்ச் மீண்டும் இந்த வழக்கை விசாரித்தது. இன்றைய வழக்கு விசாரணையின் போது ஆளுநரின் செயல்பாட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் மாநில அமைச்சரவையின் முடிவை எதிர்த்து செயல்பட ஆளுநருக்கு எந்த பிரிவு அதிகாரம் வழங்குகிறது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விடுதலையே தீர்வு
அத்துடன் யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. இந்த வழக்கில் தற்போதைய நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்தே பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications