அரசு ஊழியர் இறந்துவிட்டால் GPF தொகை யாருக்கு? தாய்க்கா? மனைவிக்கா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு ஒன்று பல அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது. அரசு பணியாளர் ஒருவரின் பொதுத் தணிக்கை நிதி (GPF) தொகை அவரது மரணத்துக்கு பிறகு யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தில், மனைவியும் தாயாரும் இருவரும் உரிமையாளர்கள் என்று தெளிவான உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. குறிப்பாக, அரசு பணியாளர் உயிருடன் இருக்கும்போது தனது நாமினேஷன் பதிவுகளை மாற்றாமல் இருந்தாலும், திருமணம் ஆகி குடும்பம் என வந்துவிட்டால், அவர் முன்பு செய்த நாமினேஷன் தானாகவே செல்லாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு அரசு ஊழியர் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு பல்வேறு சேவைகளை பெறுவதற்காக நாமினேஷனில் மனைவியின் பெயரை சேர்த்திருந்தார்.
ஆனால் GPF நிதிக்கான நாமினேஷனை மாற்றவில்லை. அந்த நாமினேஷனில் பணியாளரின் தாயார் மட்டுமே பெயர் சேர்த்திருந்தார். 2021 ஜூலையில் அவர் மரணடைந்த போது, மனைவிக்கு அவரது பணப் பலன்கள் மூலம் சுமார் 60 லட்சம் ரூபாய் கிடைத்தது.

ஆனால் GPF தொகையை வழங்கும்போது, அந்த அரசு ஊழியரின் நாமினி தாயார் தான் என்பதால் முழு தொகையும் அவருக்கே வழங்கப்படும் என்று GPF அமைப்பு கூறியுள்ளது. இதனையடுத்து அவரது மனைவி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை (CAT) அணுகியுள்ளார். அந்த அமைப்பு மனைவிக்கும் தாயாருக்கும் சம அளவில் GPF தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து மனைவி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சந்தய் கரோல் மற்றும் ஜஸ்டிஸ் என். கோடிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், நாமினேஷன் படிவத்தில் உள்ள விதிகள் மிகத் தெளிவாக உள்ளன என்றும், ஒருவர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை அமைத்த பிறகு, முன்னதாக இருக்கும் நாமினேஷன் தானாகவே செல்லாது ஆகிவிடும் என்றும் தெரிவித்தனர். அதாவது, 2003ல் அவர் திருமணம் செய்தவுடன் அந்த நாமினேஷன் செல்லாமல் போய்விட்டது எனவும், . இதை மாற்ற அதிகாரிகள் நினைவூட்ட வேண்டிய பொறுப்பு இல்லையென்றாலும், மாற்றுவது பணியாளரின் கடமையெனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த விதிகள் உருவாக்கப்பட்டதே ஊழியர்கள் சில சமயம் நாமினேஷன் மாற்ற மறந்து விடுவதால் உருவாகும் பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் தான் எனவும், இந்த விதிகளின்படி செல்லுபடியாகாத நாமினேஷன் இருந்தால் அந்த GPF தொகை குடும்ப உறுப்பினர்களுக்கு சமமாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும். எனவே மனைவிக்கும் தாயாருக்கும் சம உரிமை உள்ளது என்பது நீதிமன்றம் கூறியுள்ளது.
மனைவிக்கு வழங்கப்பட்ட முந்தைய பங்கை உறுதிப்படுத்தி, மீதமுள்ள தொகையில் பாதியை தாயாருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் இந்த வழக்கில் சட்டப்படி செயல்பட்டுள்ளனர் என்றும், நாமினேஷன் மாற்றத்தை ஊழியர் தானே செய்ய வேண்டியது என்றும் நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்களின் GPF நாமினேஷன் விதிகள் மற்றும் குடும்ப உரிமைகள் குறித்து தெளிவுபடுத்தும் முக்கிய வழிகாட்டுதலாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications