நடிகைக்கு பாலியல் தொல்லை.. சித்திக்கை கைவிட்ட உயர் நீதிமன்றம்! முன் ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக துணை நடிகை ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த நிலையில் கேரளா உயர்நீதிமன்றம் அந்த வழக்கில் சித்திக்குக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பாக மலையாள நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இதில் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வல்சலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் இந்த கமிட்டி விசாரணை நடத்தியது.
தொடர்ந்து 60க்கும் மேற்பட்டோர் திரை உலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள் புறக்கணிப்புகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். 2019ஆம் ஆண்டு இந்த குழு தனது அறிக்கையை கேரள முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. ஆனால் பல ஆண்டுகளாக அது வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் உரிமை ஆணையத்தின் மூலம் இந்த அறிக்கை வெளியானது. அதில் பல நடிகைகள் பெண் கலைஞர்களுக்கு பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றதாகவும், பாலியல் இச்சைக்கு அழைக்கும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகள், பெண் தொழில்நுட்ப பணியாளர்கள் மலையாள சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதை அடுத்து மலையாள நடிகர்கள் இயக்குனர்கள் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலையாள சினிமா அகடமி தலைவரும் பிரபல இயக்குனருமான ரஞ்சித், தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகை நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள துணை நடிகையான ரேவதி சம்பத்தும் நடிகர் சித்திக் மீது புகார் தெரிவித்தார். இதை அடுத்து குற்றச்சாட்டை மறுத்த சித்திக் தன் மீது பொய்யான பாலியல் புகார் கூறியதாக துணை நடிகை ரேவதி சம்பத் மீதும் காவல் துறையில் புகார் அளித்தார். அதே நேரத்தில் பாலியல் புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவிலும் ரேவதி சம்பத் சித்திக் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக திருவனந்தபுரம் காவல்துறையினர் நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதன் காரணமாக கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் செப்டம்பர் 24ஆம் தேதி இந்த மாதம் விசாரணைக்கு வந்த போது அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செயதது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், சிறிது காலம் அவர் தலைமறைவாகி இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பாலியல் வழக்கில் தன் மீதான புகார் ஒருதலைப் பட்சமாக விசாரிக்கப்படுவதாகவும், வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சித்திக் முன்ஜாமின் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சித்திக்கிற்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார் சித்திக்.












Click it and Unblock the Notifications