முதல் தூதுவர் கடவுள் கிருஷ்ணர் தான்! இந்த பிரச்சனையையும் அவரே முடிக்கணும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் புனரமைப்பு தொடர்பான வழக்கில், கடவுள் கிருஷ்ணர் வழிகாட்டுதலை மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்றம் கருத்துச் சொல்லி இருக்கிறது.. மேலும், இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் உத்தரப் பிரதேச அரசும் மத்தியஸ்தம் செய்ய முயல வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிருந்தாவனில் அமைந்துள்ள கோயில் ஸ்ரீ பாங்கே பிஹாரி. 1862இல் கட்டப்பட்ட இந்த கோயில் வட இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் பரம்பரை பூசாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. அவர்கள் தான் அங்குத் தினசரி சடங்குகள் மற்றும் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்கள்.

உத்தரப் பிரதேச அரசு உத்தரவு
இதற்கிடையே கடந்த 2022இல் அங்கு நடைபெற்ற ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் உயிரிழந்தனர். கோயில் மோசமாக இருப்பதே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்றும் இதனால் கோயிலை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.. கடந்த 2023 செப்டம்பரில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் கோயிலை சுற்றி ஒரு நடைபாதை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிருஷ்ணர் தான்
கோயில் நிதியில் இருந்து ₹500 கோடியைப் பயன்படுத்தி, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷியின் அமர்வு இந்த வழக்கில் தான் கடவுள் கிருஷ்ணன் இரு தரப்பிற்கும் மத்தியஸ்தம் செய்யவார் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "கிருஷ்ணர் தான் முதல் மத்தியஸ்தர்... எனவே, இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்யுங்கள்" என்று அறிவுறுத்தியது (மகாபாரதத்தில் கிருஷ்ணர்தான், பாண்டவர் மற்றும் கவுரவர் இடையே தூதுவராக செயல்பட்டு மத்தியஸ்தம் செய்தவர்). மேலும், மாநில அரசுக்கும் கோயில் அறங்காவலர் குழுவுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்க்க ஒரு குழுவை அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது. அதேநேரம், அவசரச் சட்டம் தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்க ஏன் இவ்வளவு அவசரம் என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அந்த சட்டம் செல்லுபடியாகுமா என்பதை அலகாபாத் உயர் நீதிமன்றம் முதலில் சோதிக்க வேண்டும் என்று கூறியது.
உச்ச நீதிமன்றம் அதிருப்தி
இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் மீதும் உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், மே 15ம் தேதி கோயில் நிதியைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அதை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டது. நீதிபதிகள் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் நாங்கள் ஒரு திட்டத்தை முன்மொழிகிறோம். முந்தைய தீர்ப்பின் (கோயில் நிதியைப் பயன்படுத்த அனுமதி தருவது) ஒரு பகுதியை நிறுத்தி வைக்கிறோம்.
உத்தரவு
ஒரு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது மூத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை மேலாண்மை அறங்காவலராக நியமிப்போம். அவசரச் சட்டம் செல்லுபடியாகுமா என்பது தீர்மானிக்கப்படும் வரை இந்தக் குழு கோயிலை நடத்தும். ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய இடைக்காலக் குழுவுக்கு நிதியைப் பயன்படுத்துவதற்கு (உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பக்தர்களுக்குப் பாதுகாப்பான உறுதி செய்யவும்) சில அதிகாரங்களை வழங்குவோம்" என்றனர்.
உ.பி. அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்தும் கோயில் சடங்குகள் மற்றும் நிர்வாகத்தில் மாநில அரசு தலையிடக்கூடாது என்றும் கோயிலின் அறங்காவலர் குழு தனியாக வழக்கு தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசுடன் ஆலோசித்துப் பதிலளிக்க நாளை காலை 10:30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications