நல்லா இருங்கோ.. தமிழில் பேசி பட்டியலின பெண்ணை காதலனுடன் இணைத்த உச்சநீதிமன்ற நீதிபதி - சுவாரசியம்
டெல்லி: கள்ளக்குறிச்சியில் பட்டியலின பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த கள்ளக்குறிச்சி இளைஞருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். இந்த வேளையில், பட்டியலின பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமண போட்டோ, ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். திருமணத்துக்கு பிறகும் கூட அந்த பெண்ணை கண்கலங்காமல் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். மீறினால் இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கூறினார்.
உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தமிழில் பேசியது சுவாரசியத்தை ஏற்படுத்தியதோடு, கர்நாடகாவை சேர்ந்த நீதிபதி நாகரத்னா எப்படி தமிழ் கற்றார் என்பது பற்றி கூடுதல் தகவலை தெரிவித்தது அனைவரையும் கவனிக்க வைத்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன். இவருக்கும், பட்டியலின பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் விரும்பி காதலித்தனர். இருவரும் நெருங்கி பழகினர். இதனால் அந்த பெண் கர்ப்பிணியானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள் என்று நவீனிடம் அவரது காதலி கூறினார்.
காதலியை கர்ப்பமாக்கிய நவீன்
இதையடுத்து தனது காதல் குறித்து நவீன் தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அதுமட்டுமின்றி நவீனின் மனதையும் மாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நவீனும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீனை கைது செய்தனர். தற்போது அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு
இந்த வழக்கில் நவீன் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு செய்தார். அவரது மனு தள்ளுபடியானது. அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் அவரது மனு தள்ளுபடியானது.
இதையடுத்து நவீன் உச்சநீதிமன்றம் சென்றார். ஜாமீன் கோரி நவீன் மனு செய்தார். உச்சநீதிமன்றத்தில் நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கை, விசாரித்த உச்சநீதிமன்றம் நவீனை காணொலி காட்சி மூலமாக ஆஜராக உத்தரவிட்டார்.
திருமணம் செய்வதாக உறுதி
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி நாகரத்னா அமர்வில் விசாரித்தார். அப்போது, பட்டிலின பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நவீன் கூறினார். இதையடுத்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். மேலும், நீதிபதி நாகரத்னா தமிழில் பேசினார்.
நீதிபதி நாகரத்னா, நவீனை பார்த்து‛‛எப்போது திருமணம் செய்வீங்க'' என்று கூறினார். அதற்கு நவீன், ‛‛நான் சிறையை விட்டு வந்த உடனே திருமணம் செய்து கொள்கிறேன்'' என்றார். அதேபோல் பட்டியலின பெண்ணிடமும் நீதிபதி நாகரத்னா, ‛‛அவரை திருமணம் செய்து கொள்ள ஓகே வா'' என்று கேட்டார்.
அதோடு நவீனின் தாயும், தந்தையும் வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராகி இருந்தனர். அப்போது அவர்களிடம் நாகரத்னா, ‛‛அந்த பெண்ணை திருமணம் செய்து வந்த பிறகும் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். ஏதேனும் பிரச்சனை வந்தால் மகனின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்து விடுவேன்'' என்று கூறினார்.
நல்லா இருங்கோ என வாழ்த்து
அதுமட்டுமின்றி திருமணத்தின்போது எடுக்கப்படும் போட்டோ, வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அப்போது ‛நல்லா இருங்கோ' என்று அவர் நவீன் மற்றும் அவரது காதலியை தமிழில் வாழ்த்தி அனுப்பினார்.
கர்நாடகாவை சேர்ந்தவர்
உச்சநீதிமன்றத்தில் பொதுவாக ஆங்கிலத்தில் தான் வழக்கு விசாரணை நடக்கும். பிராந்திய மொழிகளில் நீதிபதிகள் பேசுவது அரிதிலும் அரிதானது. ஆனால் நீதிபதி நாகரத்னா இந்த வழக்கின்போது நவீன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தமிழில் பேசினார். தமிழில் பேசிய நீதிபதி நாகரத்னா கர்நாடகாவை சேர்ந்தவர்.
இவருக்கு தமிழ் எப்படி தெரியும் என்பது பற்றியும் தெரிவித்தார். நாகரத்னா பெங்களூரில் வசித்தபோது பக்கத்து வீட்டில் தமிழ் பேசும் குடும்பம் இருந்தது. அங்கு அடிக்கடி சென்று வந்தபோது தமிழ் கற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர் மராட்டிய, கொங்கணி மொழியும் தெரியும் என்று கூறியது சுவாரசியமாக அமைந்தது.












Click it and Unblock the Notifications