கர்நாடகா ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது?
டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிய தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் அந்த கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது இஸ்லாமிய மத வழக்கப்படியான ஹிஜாப் அணிந்து வந்தனர்.
ஆனால் ஹிஜாப் அணிய பியூ கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இத்தடைக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்துக்கு எதிராக அதே கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் தொடங்கி நாடு முழுவதும் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

கர்நாடகா அரசு தடை
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஹிஜாப் இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
கர்நாடகா அரசின் ஹிஜாப் அணிய தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரிதான் என்ற கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 6 முஸ்லிம் மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஆகையால் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருந்தன.

விரைவாக விசாரிக்க கோரிக்கை
கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் ஆஜராகி, ஹிஜாப் வழக்கில் முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் 4 மாதங்களாக நிலுவையில் இருக்கின்றன. ஆகையால் உடனே விசாரிக்க வேண்டும். அல்லது ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துவிட்டு பின்னர் இவ்வழக்கை விசாரிக்கலாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் இதனை தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நிராகரித்தார்.

நாளை தீர்ப்பா?
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் கர்நாடகா அரசின் ஹிஜாப் தடைக்கு எதிராக முஸ்லிம்கள் மாணவிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது, மேல்முறையீட்டு மனுக்கள் மீது கர்நாடகா அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஹிஜாப் வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா , சுதன்ஷு அடங்கியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையின் போது உச்சநீதிமன்ற கேள்விகள் பல்வேறு அதிரவைக்கும் கேள்விகளை எழுப்பி இருந்தனர். அதேபோல் அனைத்து தரப்பும் அனல் பறக்கும் வாதங்களை முன்வைத்தன. இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 22-ந் தேதி நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
