எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை வேகமா விசாரிங்க.. நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!
டெல்லி: எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
எம்.பி, எம்.எல்.ஏக்கள் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அதிகமாக தண்டிக்கப்பட்டால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை உள்ளது. தற்போதைய 6 ஆண்டு தடைக்கு எதிராக, தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை கண்காணிக்க சிறப்பு பெஞ்ச் மூலம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து தீர்ப்பது தொடர்பான விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டுதலை உருவாக்குவது கடினம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை திறம்பட கண்காணித்து தீர்ப்பதற்கு தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்து, சிறப்பு அமர்வுகளை அமைக்குமாறு உயர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மற்ற வழக்குகளை விட எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற வழக்குகளின் விசாரணைக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதை சம்பந்தப்பட்ட முதன்மை அமர்வு நீதிபதி உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் சிறப்பு பெஞ்ச், தேவையானதாக உணர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கு விசாரணையை பட்டியலிடலாம். வழக்குகளை விரைவாகவும் திறம்படவும் தீர்ப்பதற்குத் தேவையான உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கலாம். நீதிமன்றத்திற்கு உதவ அட்வகேட் ஜெனரல் அல்லது வழக்கறிஞரை அழைப்பதை சிறப்பு பெஞ்ச் பரிசீலிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சிறப்பு பெஞ்ச் முன்பு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பட்டியலிடலாம், விசாரணை தொடங்குவதை உறுதி செய்வதற்காக தடை உத்தரவுக்கு விடுமுறை நாட்கள் உள்ளிட்ட நாட்களிலும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதை உறுதிசெய்யலாம். முதன்மை மாவட்ட & செஷன்ஸ் நீதிபதி ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை அத்தகைய நீதிமன்றங்களுக்கு ஒதுக்கும் பொறுப்பை ஏற்க உயர்நீதிமன்றம் கோரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் நடவடிக்கைகளின் நிலை பற்றிய மாவட்ட வாரியான தகவல்களை வழங்கும் இணையதளத்தில் உயர்நீதிமன்றம் ஒரு தனி 'டேப்' உருவாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வழக்குகளை கண்காணிக்கும் போது, சிறப்பு பெஞ்ச், விரைவான தீர்ப்பிற்குத் தேவையான உத்தரவுகள் அல்லது வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications