அரசு ஊழியர்களுக்கு செக் .. அரசு வேலையில் சேரப்போறீங்களா.. உச்ச நீதிமன்றம் போட்ட முக்கியமான உத்தரவு
டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகுதான் அவர்களது பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவர் அரசுப்பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டும் என்றும் பணியில் சேர்ந்தபோது அவர் தாக்கல் செய்த ஆவணங்களின்படி அவரது குணநலன், பின்னணி, தேசியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் என எந்த மாநிலத்திலும் அரசு பணியில் சேருவதற்கு காவல்துறை சரிபார்ப்பு என்று ஒன்று உள்ளது. காவல்துறையில் வழக்கு இருந்தால் அவர்கள் அரசு பணியில் சேருவது கடினம். எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதில் அவர் விடுதலையாகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு வேலைக்கு போவது மிகவும் கடினம். என்னதான் திறமையாக தேர்வில் சாதித்தாலும் நன்னடத்தை முக்கியம் என்பதால், இந்த விதிகள் உள்ளன.

அதேபோல் இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேலைக்கு சேருபவராக இருந்தாலும் இந்தியராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அவர் இந்தியர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சரிபார்ப்பதும் காவல்துறையின் வேலையாக உள்ளது. அதேபோல் கல்வி ஆவணங்கள், இதர ஆவணங்கள் பள்ளி கல்வித்துறை உள்பட பல்வேறு துறைகள் சரிபார்க்க வேண்டும்.
அந்த காலக்கட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் சரிபார்ப்புகள் முறையாக நடைபெறவே இல்லை.. இதன் காரணமாக பலர் அரசு வேலையில் எப்படியோ சேர்ந்துவிட்டார்கள். அவர்கள் குறித்து கடந்த சில வருடங்களாகத்தான் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.அதில் அவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது
மேற்கு வங்காளத்தில் பாசுதேவ் தத்தா என்பவர் கடந்த 1985-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி அந்த மாநிலத்தில் அரசுப்பணியில் சேர்ந்தார். ஆனால், பாசுதேவ் தத்தா கடந்த 2010-ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டார். ஏனென்றால், அவர் இந்திய குடிமகன் அல்ல என்று அரசால் கண்டுபிடிக்கப்பட்டது. பணிநீக்கத்தை எதிர்த்து மேற்கு வங்காள நிர்வாக தீர்ப்பாயம், கொல்கத்தா ஐகோர்ட்டு ஆகியவற்றில் பாசுதேவ் தத்தா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தன.
அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.நீதிபதிகள், பாசுதேவ் தத்தாவின் பணிநீக்கத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறுகையில், நாட்டில் ஒருவர் அரசுப்பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகும்.
பணியில் சேர்ந்தபோது அவர் தாக்கல் செய்த ஆவணங்களின்படி அவரது குணநலன், பின்னணி, தேசியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளும் இப்பணியை செய்ய வேண்டும். நன்கு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசுப்பணியில் சேர்ந்த அந்த நபரின் பின்னணியை சரிபார்த்த பிறகுதான் அவரது பணியை வரன்முறை செய்ய வேண்டும்" இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications