இவிஎம் தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
டெல்லி: தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இவிஎம் இயந்திரங்களில் உள்ள தரவுகளை தற்போதைக்கு அழிக்கவோ, ரீலோடு செய்யவோ வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நம் நாட்டில் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவிஎம் எனப்படும் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எனினும், தேர்தல் ஆணையம் இவற்றை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் மெமரி கார்டு ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க இதை செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் ஹரியானா காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மனு தக்கல் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனுவிற்கு 15 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இயந்திரங்களில் உள்ள தரவுகளை அழிக்கவோ ரீலோடு செய்யவோ கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிந்த பிறகு கடைபிடிக்கப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறை என்ன என்ற விவரங்களையும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக மனு மீதான விசாரணையின் போது, பரபரப்பு வாதங்கள் நடைபெற்றது. தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகு பெல் நிறுவனத்தின் என்ஜினியர்கள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள தரவுகளை அழித்து விடுவார்கள் எனவும், டம்மி சின்னத்தை லோடு செய்து வைப்பார்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தரவுகள் ஏன் அழிக்கப்படுகிறது. இவிஎம் இயந்திரத்தில் உள்ள தரவுகள் அழிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவிஎம் இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் மெமெரி எவ்வாறு அகற்றப்படுகின்றன என்ற நடைமுறைகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தர வேண்டும். தோல்வி அடைந்த வேட்பாளருக்கு விளக்கம் தேவைப்பட்டால், முறைகேடு நடைபெறவில்லை என்பதை என்ஜினியர்கள் விளக்க வேண்டும்" என்றும் கூறினர்.












Click it and Unblock the Notifications