தேர்தல் பத்திரங்களால் கட்சிகள் பெற்ற நன்கொடை எவ்வளவு? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆர்டர்
டெல்லி: தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இது தொடர்பான இன்றைய விசாரணையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 2018ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இவை மற்ற மாதங்களில் 10 நாட்களும் தேர்தல் இருக்கும் மாதங்களில் அனைத்து நாட்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தன.

இதன் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக நடைபெற்ற விசாரணையில் தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரியல்ல என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிரான வாதத்தை வைத்த சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா,
"தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான். ஏனெனில் சிலர் குறிப்பிட்ட கட்சிக்கு அதிக அளவில் நிதியளித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் நிதியளித்த கட்சி தோல்வியடைந்தால், வெற்றியடைந்த கட்சியினர், தோல்வியடைந்த கட்சிக்கு நிதியளித்தவர்களை பழிவாங்கக்கூடும். எனவே தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான்" என்று கூறியிருந்தார். இதனையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அவர்கள், "இதுநாள் வரை தேர்தல் பத்திரங்கள் நன்கொடையின் தரவுகள் இருக்கிறதா?" என கேள்வியெழுப்பினர். ஆனால் இந்த தரவுகளை ஆணையம் பராமரிக்கவில்லை. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தேர்தல் பத்திர நிதிகளின் தரவை இன்று வரை பராமரிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், செப்.30ம் தேதி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்கள், நிதி கொடுத்தவர்களின் விவரங்கள் ஆகியவை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஏற்னெவே இந்த வழக்கின் விசாரணையில், அரசியல் கட்சிகள் எங்கிருந்து பணம் பெறுகின்றன என்கிற விவரங்களை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications