அமலாக்கத்துறை என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறது? டாஸ்மாக் வழக்கில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்
டெல்லி: டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளது. "அமலாக்கத்துறை என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறது? மாநில அரசின் விசாரணை நடத்தும் உரிமையை அமலாக்கத்துறை பறிக்க பார்க்கிறதா?" என்றும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பியுள்ளார். "சந்தேகம் இருந்தாலே அலுவலகம் உள்ளே புகுந்து ஆவணங்களை எடுத்து சென்றுவிடுவீர்களா?" எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் மது பானக் கடைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது, பார் உரிமம் வழங்குவதில் முறைகேடு உள்ளிட்ட புகார்களில் ₹1,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை (ED) சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

அமலாக்கத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்வி
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் நடைபெற்றது.
அப்போது உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. "அமலாக்கத்துறை என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறது?" எனக் கேட்ட தலைமை நீதிபதி, "மாநில விசாரணை அதிகாரத்தின் உரிமையை பறிக்க முயலுகிறதா?" என்றார்.
"சந்தேகம் இருந்தாலே அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வது எவ்வாறு சரியாகும்? ஒரு அதிகாரி தவறு செய்திருந்தால், அவரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். சிபிஐ கூட சோதனை செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அரசிடம் தகவல் அளிக்கிறது" என்றும் நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
மொபைல்களை எப்படி கைப்பற்ற முடியும்?
இன்று வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் டாஸ்மாக் சார்பில் முகுல் ரோஹத்கி வாதிட்டனர். மாநில அரசு நிறுவனத்தின் மீது எப்படி சோதனை நடத்த முடியும், மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களை எப்படி கைப்பற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினர். ஏற்கனவே குற்றச்சாட்டுகள் குறித்து காவல் துறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினர்.
"நாங்கள் ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். விசாரித்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும் போது (அமலாக்கத்துறை) இடையில் ஏன் வருகின்றனர்?" என கபில் சிபல் வாதிட்டார். ரோஹத்கி முன் வைத்த வாதத்தில், "டாஸ்மாக் ஊழியர்களின் தனிப்பட்ட உரிமைக்கு என்ன ஆனது? ஊழியர்களின் மொபைல்களை எப்படி கைப்பற்ற முடியும்? பெண் ஊழியர்கள் எப்படி தடுத்து வைக்கப்பட்டனர்?" என்று கேள்வி எழுப்பினார்.
பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, "ஏற்கனவே 47 வழக்குகளை பதிவு செய்தும், 'பரவலான ஊழல்' தொடரும் பட்சத்தில், அமலாக்கத்துறை விசாரிக்க முடியும்" என்றார்.
"47 வழக்குகள் உள்ளன... பெரிய அளவிலான முறைகேடுகள், பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது. நாங்கள் பணமோசடி அம்சத்தை மட்டுமே விசாரிக்கிறோம். இவை அனைத்தும் முதன்மையான குற்றங்கள்" என்று ராஜு கூறினார்.
கூட்டாட்சி அமைப்புக்கு என்ன ஆனது?
இதற்கு பணமோசடி தடுப்புச் சட்டம், பிரிவு 66(2)ஐ சுட்டிக்காட்டி கபில் சிபல் பதிலடி கொடுத்தார். இந்த சட்டத்தின்படி, ஒரு விசாரணைக்கு இடையில் மற்றொரு சட்டம் மீறப்பட்டதற்கான ஆதாரத்தை அமலாக்கத்துறை கண்டறிந்தால், அந்த தகவலை மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த கட்டத்தில் தலைமை நீதிபதியும் தலையிட்டு, ராஜுவிடம் "கூட்டாட்சி அமைப்புக்கு என்ன ஆனது? 66(2)க்கு என்ன ஆனது?" என்று கேட்டார். அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "நாங்கள் குற்ற ஆதாரங்களைக் கண்டறிந்தோம்... எஃப்.ஐ.ஆர்-களின் தன்மையைப் பாருங்கள், ஊழல் எவ்வளவு பரவலாக உள்ளது என்று பாருங்கள்" என்று பதிலளித்தார்.
"அப்படியென்றால் அவர்கள் அதை எங்களிடம் கொடுக்க வேண்டும்... நீங்கள் ஃபோன்களை, விரிவான உரையாடல்களை எடுத்துச் செல்கிறீர்கள்" என்று சிபல் கூறினார். இவ்வாறாக இரு தரப்பிலும் விவாதங்கள் முன் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications